கோட்டா கோ கம போராட்டத்தை காட்டிக்கொடுத்துள்ளார் ரணில்!
24 May,2022
ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்று கோட்டா கோ கம போராட்டத்தை காட்டிக்கொடுத்துள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர்,
"முன்னாள் அமைச்சர்களை மீண்டும், மீண்டும் நியமிப்பதன் மூலம் நாட்டின் பிரச்சினைகள் தீராது என்பதை அரச தலைவரும் பிரதமரும் புரிந்துக்கொள்ள வேண்டும்.
தொடர்ந்தும் காலத்தை வீணடிக்காது நாட்டை ஆட்சி செய்யக் கூடிய அணியிடம் நாட்டை ஒப்படைத்து விட்டு பதவி விலக வேண்டும் என அரச தலைவர் உட்பட அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்.
ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்று கோட்டா கோ கம போராட்டத்தை காட்டிக்கொடுத்துள்ளார் என்றே நாங்கள் கருதுகிறோம். எந்த நிபந்தனைகளையும் விதிக்காது அவர் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டதே இதற்கு காரணம்.
குறைந்தது அவர் பிரதமராக பதவியேற்று அமைச்சரவை அமைச்சர்களுடன் கலந்துரையாடி நாட்டின் அடிப்படை பிரச்சினைகளை அடையாளம் கண்டு, எரிவாயு, மின்சாரம், பசளை, எரிபொருள், மருந்துகளை பெற்றுக்கொடுக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பணவீக்கம் தொடர்பான பிரச்சினையை தீர்க்க வேலைத்திட்டங்கள் இல்லை. அமைச்சர்கள் மாறினாலும் அரசாங்கத்தை புதிய அரசாங்கம் என்று ஏற்றுக்கொள்ள முடியாது.
புதிய பிரதமர் பதவியேற்றார், புதிய அரசாங்கம் பதவியேற்றது எனினும் அரசியல் ஸ்திரத்தன்மையோ, வெளிநாடுகளில் உள்ள இலங்கை தொழிலாளர்கள் உட்பட பணத்தை அனுப்புவோருக்கு ஒரு நம்பிக்கை ஏற்படவில்லை.
பிரதமர் தனது சிஷ்யர்களை கொண்டு குழு ஒன்றை நியமித்துள்ளார். அந்த குழுவில் வஜிர, அகில, ரங்கே பண்டார போன்றவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமக்கு ஆதரவாளர்களை அருகில் அழைத்து வைத்துக்கொண்டு நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாது.