இலங்கையில் 18-ந்தேதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
17 May,2022
இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு விடுதலைபுலிகளுக்கு எதிராக இறுதிகட்டபோர் நடந்தது. இந்த சமயம் தற்போதைய அதிபர் கோத்தபய ராஜபக்சே இலங்கை பாதுகாப்பு துறை செயலாளராக இருந்தார்.
இந்த போரின்போது 1ண லட்சம் தமிழர்கள் ஈவு இரக்கமின்றி கொன்று குவிக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 18-ந்தேதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நாளை தமிழ் அமைப்புகள் முள்ளிவாய்க்கால் நினைவு தினமாகவும், இனப்படுகொலை நினைவு தினமாகவும் அனுசரித்து வருகின்றனர்.
அதன்படி இந்த ஆண்டு நாளை மறுநாள் (18-ந்தேதி) 13வது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி கடைபிடிக்கப்படுகிறது.
அன்றைய தினம் இலங்கை மட்டக்கிளப்பு கல்லடி பிரதான வீதி முருகன் கோவிலில் இந்த நிகழ்ச்சி நடைபெறும் என மட்டக்கிளப்பு முன்னாள் எம்.பி. அரியநேத்திரன் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
முள்ளிவாய்க்காலில் கடந்த 13 ஆண்டுக்கு முன்பு நடந்த இனப்படுகொலை செய்யப்பட்ட நமது உடன்பிறப்புகளை நினைவு கூருவது நமது உரிமை ஆகும்.
முதலாவதாக முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை பல அச்சுறுத்தலுக்கு மத்தியில் இலங்கை மட்டக்கிளப்பு மாவட்டத்தில் மட்டுமே கொக்கட்டிச்சோலை தான் தோன்றீஸ்வரர் ஆலயத்திலும், மாமாங்கேஸ்வரர் ஆலயத்திலும் நடத்தினோம். அதன்பிறகு மட்டக்கிளப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல 18-ந்தேதி மத்திய லண்டனில் உள்ள ட்ரபால்கர் சதுக்கத்தில் மாலை 5.30 மணிக்கு முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவு நிகழ்ச்சி நடைபெறும் என பிரித்தானியா தமிழர் பேரவை அறிவித்து உள்ளது.
இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது,
இந்த நினைவு கூரும் நிகழ்ச்சியில் அனைவரும் ஒன்று திரண்டு இறந்த மக்களுக்காக அஞ்சலி செலுத்துவதுடன் நீதிக்கான பயணத்தில் நம்பிக்கையுடன் செயல்படுவோம் என உறுதி எடுப்போம் . இந்த நிகழ்வில் ஆவண திரைப்படம் உலகம் எங்கிலும் பார்க்கக்கூடியதாக வெளியிடப்படும். இதில் உலக நாடுகளின் முக்கிய பிரமுகர்கள் உரையாற்ற உள்ளனர்.
சரியாக மாலை 6 மணி 18 நிமிடத்தில் (மே 18 18:18 மணிக்கு) அனைத்து மக்களும் இணைந்து ஒளி ஏற்றுவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.