சவேந்திர சில்வா- உடன் பதவி விலக கோரிக்கை
15 May,2022
நாடளாவிய ரீதியில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் இராணுவத் தளபதி தலையிடத் தவறியதாகவும் எனவே அவர் பதவி விலகவேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தென்னிலங்கை ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
அரசாங்கத்திற்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் அரச தலைவருடனான கலந்துரையாடல் கோட்டையிலுள்ள அரச தலைவர் மாளிகையில் இடம்பெற்றது.
இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இதில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பத்திரன, நிகழ்வுகளின் ஆரம்பம் முதல் அரச தலைவருடன் தான் இருந்ததாகவும், அரச தலைவர், காவல்துறை மா அதிபருக்கும் இராணுவத் தளபதிக்கும் உத்தரவு பிறப்பித்ததை தான் பார்த்ததாகவும் ஆனால் அந்த உத்தரவுகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே அரச தலைவரின் பணிப்புரைக்கு அமைவாக செயற்படாத இராணுவத் தளபதி தனது பதவியை இராஜினாமா செய்யுமாறு கோரிக்கை விடுத்த அவர்கள் காவல்துறை மா அதிபரும் அரச தலைவரின் உத்தரவை பின்பற்றவில்லை என தெரிவித்துள்ளனர் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.