மிகவும் நெருக்கடியான சூழ் நிலையில், இலங்கையின் பிரதமராக பதவியேற்றுக் கொண்டுள்ளார் ரணில் விக்ரமசிங்க. இலங்கையில் ரணில் விக்ரமசிங்கே நான்கு முறை பிரதமர் பதவி வகித்தவர் என்றபோதும், ஒரு முறை கூட அவர் தனது பதவிக் காலத்தை முழுமையாகப் பூர்த்தி செய்யவில்லை.
ஐக்கிய தேசிய கட்சியில், தன்னை மிக இளம் வயதிலேயே இணைத்துக்கொண்ட, ரணில் விக்ரமசிங்கே, 1977-ம் ஆண்டு முதல்முறையாக இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது அமைக்கப்பட்ட அமைச்சரவையில், வெளியுறவு இணையமைச்சராக பதவியேற்ற ரணிலுக்கு 28 வயது.இலங்கையில், மிக குறைந்த வயதில் அமைச்சரானவர் என்ற பெருமையையும் பெற்றார்.
பின்னர் கல்வித்துறை அமைச்சரான ரணில் அப்பதவியில் 9 ஆண்டுகள் நீடித்தார். அப்போது பல்வேறு சீர்திருத்தங்களை அவர் மேற்கொண்டார். 1993-ம் ஆண்டு, அப்போதைய அதிபர் ரணசிங்கே பிரேமதாசா, விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டதையடுத்து பிரதமராக இருந்த விஜ்ஜிதுங்கே அதிபரானார். ரணில் விக்ரமசிங்கே பிரதமராக நியமனம் செய்யப்பட்டார்.
ஆனால், 1994-ம் ஆண்டு ஆகஸ்டுடன் இவரது பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. அடுத்த தேர்தலில் ரணில் தோல்வியடைந்து ஆட்சியை பறிகொடுத்தார். அறுதி பெரும்பான்மை பெற்ற மக்கள் கூட்டணி கட்சி ஆட்சி அமைத்தது. ரணில் கட்சியை சேர்ந்த காமினி திசநாயகே, எதிர்க்கட்சி தலைவரானார். காமினி திசநாயகேவும் விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு பலியாக எதிர்க்கட்சித் தலைவரானார் ரணில். அப்போது ஆக்கபூர்வமாக செயல்பட்டு, மக்களின் நன்மதிப்பையும் பெற்றார்.
1999-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், ரணில் விக்ரமசிங்க அவரது கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக களம் இறக்கப்பட்டார். ஆனால், விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு ஆளாகி ஒரு கண்ணை இழந்திருந்த சந்திரிகா குமாரதுங்கே, அனுதாப அலையால் வெற்றி பெற்று அதிபரானார்.
2001-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் விக்ரமசிங்கவின் கட்சி பெரும்பான்மை இடங்களை பிடித்ததால், அவர் மீண்டும் பிரதமரானார். ஆனால் அதிபராக இருந்த சந்திரிகாவுடன் ரணிலுக்கு ஒத்து போகாததால், பல்வேறு மோதல்கள் ஏற்பட்டன. மேலும் பல ஆண்டுகளாக இலங்கையில் நீடித்து வந்த உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வருவதிலும் ரணில் முனைப்பு காட்டினார். இலங்கை அரசின் பரம வைரியான விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைக்கு நாள் குறிக்கப்பட்டது.
2002-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 6 சுற்று பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றன. இதற்கு சிங்கள கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதன் காரணமாக, 2004 பிப்ரவரி 7-ம் தேதி நாடாளுமன்றத்தை சந்திரிகா கலைத்தார். பதவியிழந்த ரணில், அடுத்த தேர்தலில் படுதோல்வியடைந்து, ஏறக்குறைய பத்து ஆண்டுகள் ஆட்சி அதிகாரம் இன்றி இருந்தார்.
விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் 2015-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழர் அதிகம் வாழும் வடகிழக்கு பகுதியில் ஏற்பட்ட பின்னடைவால் ராஜபக்ச கட்சி படுதோல்வி அடைந்ததால் ரணில் கட்சி மீண்டும் புத்துயிர் பெற்றது. எனினும், அவரது கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. 106 இடங்களை கைப்பற்றிய ரணிலும், 95 தொகுதிகளை பிடித்த சிறிசேனாவும் ஆட்சி அமைக்க ஒப்புக்கொண்டனர்.
அதிபராக சிறிசேனாவும், பிரதமராக ரணிலும் பதவியேற்றனர். ஆனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் வழக்கம்போல் ரணிலின் பிரதமர் பதவி, பாதியிலேயே பறிக்கப்பட்டது. இதனை எதிர்த்து நீதிமன்றத்தை நாடிய ரணிலுக்கு சாதகமான தீர்ப்பு வர அவர் மீண்டும் பிரதமராக பதவியேற்றார். பின்னர் 2019- ஆம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சவும், ரணில் விக்ரமசிங்கேவின் கட்சியை சேர்ந்த சஜித் பிரமதாசாவும் போட்டியிட்டனர். இதில் கோத்தபய வெற்ற பெற்றதால் மீண்டும் ராஜினாமா செய்தார் ரணில்.
2020 தேர்தலில் 145 இடங்களை கைப்பற்றி மாபெரும் வெற்றியை பெற்றது ராஜபக்சாக்களின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனா கட்சி. கோத்தபய அதிபராகவும், மகிந்த பிரதமராகவும் பொறுப்பேற்றனர். ரணிலும் பிரேமதாசாவும் பிரிந்து செல்ல ரணிலின் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. ஒட்டுமொத்த தேசிய வாக்குகளின் அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஒரே இடத்தின் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார் ரணில்.