கொழும்பு :பரபரப்பான சூழலில் இலங்கை பார்லிமென்ட் இன்று கூடவுள்ள நிலையில், பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தாக்கல் செய்யப் போவதாக எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.
அதே நேரத்தில் புதிய அரசியலமைப்பு தொடர்பான யோசனையை ஆராய, அமைச்சரவை துணைக்குழுவை அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று நியமித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடி
latest tamil news
அண்டை நாடான இலங்கையில் அன்னிய செலாவணி தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து, அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே இருவரும் பதவி விலக கோரி, நாட்டு மக்கள் கடந்த ஒரு மாதமாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நாட்டில் அமைதியின்மை நிலவுகிறது.பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகிவிட்டு, அனைத்து கட்சியினரையும் உள்ளடக்கிய புதிய இடைக்கால அரசு அமைக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. அதை பிரதமர் மகிந்த நிராகரித்தார்.
ராஜினாமா
இந்நிலையில், மக்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக, பொறுப்புமிக்க நிர்வாகத்தை உருவாக்க, அரசியலமைப்பில் திருத்தம் செய்ய பிரதமர் மகிந்த பரிந்துரைத்தார்.இதன் அடிப்படையில், அரசியலமைப்பில் திருத்தம் செய்யும் யோசனையை ஆராய, அமைச்சரவை துணைக்குழுவை அதிபர் கோத்தபய நேற்று நியமித்தார்.
இந்நிலையில், இலங்கை பார்லிமென்ட் கூட்டம் இன்று நடக்கிறது. அப்போது, பிரதமர் மகிந்த ராஜபக்சே தலைமையிலான பொதுஜன பெருமுன கூட்டணி அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தாக்கல் செய்ய போவதாக எதிர்க்கட்சிகள் அறிவித்து உள்ளன.இது குறித்து, பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பாலவேகயாவின் மூத்த தலைவர் அஜித் பெரேரா நேற்று கூறியதாவது:பிரதமர் மகிந்த ராஜபக்சே அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை பார்லி.,யில் இன்று தாக்கல் செய்ய உள்ளோம்.
தமிழ் தேசிய கூட்டணி மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி இணைந்து, அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தாக்கல் செய்ய உள்ளன. இருவரில் ஒருவர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தால் மட்டுமே இலங்கை சந்தித்து வரும் நெருக்கடிக்கு தீர்வு கிடைக்கும். யார் பதவி விலகுவது என்பதை அவர்களே முடிவு செய்து கொள்ளட்டும். இவ்வாறு அவர் கூறினார்.
நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றால் அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்து சட்ட நிபுணர்கள் கூறியதாவது:நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேறினால், பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் அவரது அமைச்சரவை பதவி விலக நேரிடும். அதிபருக்கு எதிரான நம்பிக்கை ஓட்டெடுப்பு வெற்றி பெற்றால் கூட, அவர் ராஜினாமா செய்ய வேண்டியதில்லை.
இலங்கை அரசியலமைப்பு சட்டம் 38ன் கீழ், அதிபர் பதவி விலக வேண்டும் எனில், அவராக முன்வந்து ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது, அவருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டு நீண்ட விவாதத்திற்கு பின் நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
இலங்கைக்கு இந்தியா நிதி
இலங்கையில் உள்ள இந்திய துாதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:இந்தாண்டு இந்தியா இலங்கைக்கு, 22 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடனுதவி செய்துள்ளது. தற்போது எரிபொருட்களுக்காக மேலும், 1,500 கோடி ரூபாய் கடனுதவி அளிக்க உள்ளது. இது தவிர, 1.6 கோடி கிலோ அரிசி இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஒன்பது முறை கப்பல்கள் வாயிலாக, 400 கோடி கிலோ பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரலில், சிங்களம் மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நல்லெண்ண அடிப்படையில் கூடுதலாக, 1.10 கோடி கிலோ அரிசி அனுப்பப்பட்டுள்ளது. இலங்கை மருத்துவமனையின் அவசர தேவைக்காக கடற்படை கப்பல் வாயிலாக மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்த வருவாயினருக்கு உதவி
இலங்கையில் விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளதை அடுத்து, குறைந்த வருவாய் பிரிவினருக்கு, 3,000 ரூபாய் முதல் 7,000 ரூபாய் வரை ரொக்கம் வழங்கப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.உலக வங்கியிடம் இருந்து பெற உள்ள, 4,500 கோடி ரூபாய் கடனில், 2,250 கோடி ரூபாய், குறைந்த வருவாய் பிரிவினரின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என, இலங்கை அரசு அறிவித்துள்ளது.