ராஜபக்சவின் முகவர் சுமந்திரனே வெளியேறு! தமிழகத்தில் வெடித்தது போராட்டம்
13 Mar,2022
ஈழத்தமிழர்களை கொன்றுகுவித்த ராஜபக்ச அரசின் கைக்கூலி சுமந்திரனை தமிழகத் தலைவர்கள் சந்திக்கக்கூடாது என வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இப் போராட்டத்தின் போது சுமந்திரனுக்கு எதிராக பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளன.
இலங்கை அரசை அனைத்துலக விசாரணையில் இருந்து காப்பாற்றும் துரோகி சுமந்திரனே தமிழகத்தை விட்டு வெளியேறு, ஐ.நா மனிதவுரிமை ஆணையத்தில் இலங்கைக்கு மூன்று தடவைகள் கால அவகாசத்தை பெற்றுக்கொடுத்த சிங்களத்தின் கைக்கூலி சுமந்திரனுக்கு தமிழகத்தில் என்ன வேலை?, விடுதலைப் புலிகள் மீதும் விசாரணை வேண்டும் என்று சிங்களத்துக்கு ஆதரவாக கூச்சலிடும் துரோகி சுமந்திரனை தமிழகத்தில் அனுமதிக்கலாமா? என இதன்போது கேள்வியெழுப்பியுள்ளனர்.
அத்துடன், இலங்கையின் ஒற்றையாட்சிக்குள் தமிழர்களின் உரிமைகளை முடக்கும் சிங்கள ராஜபக்ச அரசின் கைக்கூலி சுமந்திரனே தமிழகத்தில் கால் வைக்காதே, ஐ.நாவில் ராஜபக்ச அரசை காப்பாற்றி வரும் சுமந்திரனை தமிழகத்தில் வரவேற்பது தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்காக உயிர் நீர்த்தவர்களுக்கு செய்யும் துரோகம் அல்லவா? இலங்கை சிங்கள இராணுவத்தின் கைக்கூலி சுமந்திரனை கைகொடுத்து வரவேற்பது ராஜபக்சவை வரவேற்பதற்கு ஒப்பானதே, சர்வதேச விசாரணையை நிராகரித்து இலங்கையின் உள்நாட்டு நீதிபொறிக்குள் ஈழத்தமிழர்களின் நீதியை முடக்கும் குள்ளநரி சுமந்திரனே வெளியேறு என வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், ஈழம் என்ற சிவபூமியை கிருஸ்தவ பூமியாக மதமாற்றம் செய்யும் மேற்குலகின் அருவருடி சுமந்திரனே தமிழகத்தை விட்டு ஓடிப்போ உள்ளிட்ட பல கோசங்களையும் அவர்கள் எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.