இறுதிக் கட்ட போரில் உயிரிழந்ததாக கூறப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடல் என மீட்கப்பட்ட உடலின் மாதிரிகளைக் கொண்டு மரபணு பரிசோதனை நடத்துவதற்கு கூட ஏன் சிறிலங்கா அரசாங்கம் முன்வரவில்லை என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் (M.K. Sivajilingam) கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழ்ப்பாணம் ஊடக மையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், தேசிய தலைவரின் மரணம் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் நடத்தும் நாடகம் அரசாங்க தரப்பினரின் முரண்பட்ட கருத்துக்களின் போது வெளிப்படுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனது இறப்புத் தொடர்பில் அரசாங்கமும் அரசாங்கத்தில் உள்ளவர்களும் மாறுபட்ட கருத்துக்களையே கூறி வருகின்றார்கள். இதன்மூலம் போர்க்குற்றம் நடந்தது என்பதை அவர் ஏற்றுக்கொள்கின்றார்கள். இதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பண்பு தெரியாத வகையில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றி வசைபாடியுள்ளார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சியான ஈ.பி.டி.பி பற்றி பொது மக்களுக்கு நன்றாகத் தெரியும். எவ்வளவு படுகொலைகள் அட்டூழியங்கள் புரிந்தார் என்பது தெரியும்.
2001 ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரசாரத்திற்காக ஊர்காவற்றுறை சென்றபோது ஈ.பி.டி.பி குண்டர்களினால் சுட்டும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மூவருக்கு இரட்டை மரணதண்டனை தீர்ப்பு நீதி மன்றத்தினால் வழங்கப்பட்டது.
பிரபாகரன் உயிருடன் சரணடைந்தார் என்று டக்ளஸ் தேவானந்தா கூறுகிறார். இது முதல் தடவை அல்ல. அப்படி என்றால் சரணடைந்தவர்களை நீங்கள் படுகொலை செய்தீர்களா? என்பதற்கு பதில் கூறவேண்டும். இறுதி யுத்தத்தின் போது பிரபாகரனின் படம் என காண்பிக்கப்பட்ட படத்தில் நெற்றியில் துப்பாக்கிச்சூட்டுக் காயங்கள் இருந்தமை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
பிரபாகரன் சரணடைந்திருந்தால் விசாரணை செய்திருப்பீர்கள். இலங்கை பூராகவும் பவனியாக கொண்டு சென்றிருப்பீர்கள். ஆனால் தற்போது குறித்த விடயங்கள் தொடர்பில் ஒன்றுக்கொன்று முரணாகவே கூறிவருகின்றீர்கள்.
சரணடைந்த பின்னர் கொல்லப்பட்டார் என்பது உங்கள் கருத்து. அவ்வாறு என்றால் இந்தப் போர்க்குற்றத்திற்கு யார் பொறுப்பு? இதற்கு யார் பதில் கூறுவது? அன்று இராணுவத் தளபதியாக இருந்த சரத்பென்சேகா, பிரபாகரன் ஒரு வீரன் கடைசி வரை போராடியே மறைந்தார் என்பதை கூறுகின்றார்.
படைத் தளபதியின் கீழ் இருந்த ஓய்வுநிலை ஜெனரல் கமால் குணரட்ன என்பவர் கழுத்தில் இருந்த இலக்கம் ஒன்று என்ற இலக்கத்தகட்டையும் பிஸ்ரலையும் கைப்பற்றினோம் எனக்கூறியுள்ளார். அவ்வாறு என்றால் பிஸ்ரலுடனா அவர் சரணடைந்தார். சரணடைவது என்றால் ஆயுதங்கள் இல்லாமல் தானே சரணடைவது.
அவருடைய உடலை நாங்கள் புதைத்துவிட்டோமென ஒரு சிலர் கூறினார்கள். எங்கு புதைத்தோம்? யார் புதைத்தது? என்பது கூறப்படவில்லை. இன்னுமொரு பகுதியினர் எரித்துவிட்டு சாம்பலை கரைத்துவிட்டோம், எறிந்துவிட்டோம் என்றார்கள். ஒரு போர் வீரனது உடலுக்கு மரியாதை செலுத்தவேண்டும் என்பது மரபு.
பிரபாகரனது இறப்புத் தொடர்பில் ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்துக்களையே அரசாங்கங்கள் கூறிவருகின்றது. பிரபாகரனின் உடலை அடையாளம் காண்பதற்காக கருணாவையும் தயா மாஸ்ரரையும் கூட்டிச் சென்றீர்கள். ஒருவர் கொல்லப்பட்டால் குறித்த நபர் இந்தியாவாலும் தேடப்படுகின்றார் என்றால் ஏன் அவரின் மரண விசாரணை நடைபெறவில்லை.
உலங்கு வானூர்தி மூலம் கருணாவை கூட்டிச் செல்ல முடியும் என்றால் ஏன் சட்ட வைத்திய அதிகாரியை கூட்டிச்சென்று மரணச் சான்றிதழை வழங்கவில்லை. இந்தியாவிற்கு ஒரு நீதிமன்ற சான்றிதழை வழங்கியுள்ளீர்கள்.
இதனைவிட ஏன் டி.என்.ஏ. பரிசோதனை செய்யவில்லை. அன்றைய காலத்தில் பிரபாகரனின் தாயும் தந்தையாரும் பனாகொட இராணுவ முகாமில் தான் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள்.
பிரபாகரன் எனக் காண்பிக்கப்பட்ட உடலை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒன்றில் அவர் தன்னைத்தானே மாய்த்திருக்கவேண்டும். அல்லது அவர் உயிருடன் இருக்கின்றாரா? இல்லையா? என்பதை வரலாறு கூறும். அதனை விடுத்து சரணடைந்தார். சடலத்தை எடுத்தோம். புதைத்தோம் என்று கூறுவதில் அர்த்தம் இல்லை. பிரபாகரன் கொல்லப்பட்டிருந்தால் எதற்காக பிரபாகரனின் தாயாரிடம் பிரபாகரன் எங்கு இருக்கின்றார் என விசாரணை செய்தீர்கள்? என்பதற்கான பதிலையும் கூறவேண்டும். அல்ஜசீரா தொலைக்காட்சிக்கும் தாயார் இதனைக் கூறியுள்ளார்.
பிரபாகரனின் இறப்புத் தொடர்பில் அரசாங்கத்தின் அமைச்சர்களின் மாறுபட்ட கருத்துக்களானது பித்தலாட்டங்களும் பொய் பிரட்டுக்களுமே இருப்பதாகவே நாங்கள் உணருகின்றோம்” - என்றார்.