கச்சதீவு திருவிழாவில் இலங்கை- இந்திய பக்தர்கள் பங்கேற்க அனுமதி
20 Feb,2022
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் மட்டுப்படுத்தப்பட்ட அளவு இலங்கை – இந்திய பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா நிலைமையை கருத்திற்கொண்டு இரு நாட்டு பக்தர்களும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் கலந்துகொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா எதிர்வரும் 11 ,12 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா நிலைமையை கருத்திற்கொண்டு இலங்கை பக்தர்கள் 500 பேருக்கு மாத்திரம் கச்சதீவு திருவிழாவில் கலந்துகொள்வதற்கான அனுமதியை வழங்க யாழ். மாவட்ட செயலகத்தில் கடந்த மாதம் 26 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
எனினும், தமிழக பக்தர்களுக்கும் திருவிழாவில் பங்கேற்க சந்தர்ப்பமளிக்குமாறு தமிழக அரசாங்கம் சார்பில் தொடர்ச்சியாக கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இந்த நிலையிலேயே இரு நாட்டு பக்தர்களும் மட்டுப்படுத்தப்பட்டளவில் இம்முறை திருவிழாவில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.