சர்வதேச அரங்கில் வெளிப்பட்ட விடுதலைப் புலிகள் விவகாரம்
15 Feb,2022
நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியில் தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என சித்தரிப்பதை தவிர்த்திருந்த சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, மீண்டும் சர்வதேச அரங்கொன்றில் விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக அடையாளப்படுத்தியுள்ளமை தமிழ் மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் உள்நாட்டு யுத்தம் நிறைவிற்கு கொண்டுவரப்பட்டு 12 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் இன்று வரை அதிகார பகிர்விற்கான நிலையான பொறிமுறை ஒன்றை உருவாக்குவதில் சிறிலங்கா தோல்வி கண்டுள்ளதையும் மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டுள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வு நெருங்கும் நிலையில், முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் இந்தக் கருத்து அரசாங்கத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சியோலில் நடைபெற்ற கொரிய தீபகற்பத்தின் சமாதானத்திற்கான சர்வதேச மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய மைத்திரிபால சிறிசேன, சர்வதேசம் எதிர்பார்க்கும் தேசிய நல்லிணக்கம் நாட்டில் பூரணப்படுத்தப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.
இந்த மாநாட்டில் இராஜதந்திரிகள் மற்றும் நிபுணர்கள் உட்பட 150 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றிருந்தனர்.
இந்த மாநாட்டில் தொடர்ந்தும் உரையாற்றிய மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச்செயலாளர் பான் கீ மூன், மோதலின் முடிவில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்த பெரும் முயற்சிகளை மேற்கொண்டார் எனக் கூறியுள்ளார். எனினும் நல்லிணக்க பொறிமுறையை நடைமுறைப்படுத்துவதில் பின்னடைவு ஏற்பட்டமை வருத்தமளிப்பதாக அவர் தெரிவித்தார்.