பயங்கரவாத தடைச்சட்டத்தில் 2019 ஆண்டுகைது செய்யப்பட்ட 8 பேருக்கு வவுனியா நீதிமன்றம் பிணை!
07 Feb,2022
குண்டுகளை தம் வசம் வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 2019 ஆண்டு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 பேருக்கு வவுனியா நீதிமன்றம் இன்று(திங்கட்கிழமை) பிணை வழங்கியுள்ளது.
2019 ஆம் ஆண்டு முதலாம் மாதம் 5 ஆம் திகதி புளியங்குளம் பொலிஸாரால் கிளைமோர் குண்டை வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 3 பெண்கள் மற்றும் 5 ஆண்கள் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இதில் 9 ஆவது சந்தேக நபரான ஆனந்தராஜா என்பவர் கைது செய்யப்படாத நிலையில் திறந்த பிடியானை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த 8 பேருக்கும் ஆதரவாக சி எச் ஆர் டி நிறுவனம் சட்ட உதவியை வழங்கியிருந்தது.
இந்த நிறுவனத்தின் ஊடாக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கலும் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஆலோசனை சபை குறித்த விடயம் விசாரணைக்காக பாரப்படுத்தப்பட்டு விசாரணை நடத்தப்பட்ட நிலையில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இதன் பலனாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் 7:1 பிரிவின் பிரகாரம் சட்டமா அதிபரினால் பிணையில் விடுவிப்பதற்கான சம்மத கடிதம் நீதிமன்றத்திற்கு அனுப்பட்டிருந்தது.
இந்நிலையில் தடுத்து வைக்கப்பட்டவர்கள் சார்பில் வவுனியா நீதிமன்றத்தில் சட்டத்தரணி செ. கேதீஸ்வரன் ஆஜராகி குறித்த கடிதம் தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதன் பிரகாரம் 8 பேரும் இன்று பதில் நீதிபதி க. தயாபரனால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.