விடுதலைப்புலிகள் குறித்து பேசிய விஜயகலா – நீதிமன்றம் விடுத்த உத்தரவு
29 Jan,2022
தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் கருத்து வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பான வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் புத்திக சி.ராகல முன்னிலையில் இன்று (28) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேகநபரான விஜயகலா மகேஸ்வரன் நீதிமன்றில் ஆஜராகி இருந்தார்.
அவருக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கை குறித்து சட்டமா அதிபரிடமிருந்து இதுவரை அறிவுறுத்தல்கள் கிடைக்கவில்லை என விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர், நீதிமன்றில் அறிவித்தனர்.
இதனையடுத்து முறைப்பாட்டை ஜூன் 10-ம் திகதி அழைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கடந்த 2018ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் தமிழீழ விடுதலைப் புலிகளை மீள உருவாக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாக எழுந்த முறைப்பாட்டையடுத்து இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
facebook sharing button Share