வெளிநாட்டவர்களை இலக்குவைத்து இலங்கையில் புதிய நடைமுறை
25 Jan,2022
இலங்கையர் அல்லாதவர்களிடம் விருந்தகங்கள் கட்டணங்களை வசூலிக்கும்போது அமெரிக்க டொலராகப் பெற வேண்டுமென்பதை கட்டாயப்படுத்தி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்த விதிகள் 2022 ஜனவரி 21ஆம் நாளிடப்பட்ட இல. 2263/41 கொண்ட அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டிருக்கின்றன.
இவ்விதிகள் வெளியிடப்பட்டமையினைத் தொடர்ந்து இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையுடன் பதிவுசெய்து கொண்டுள்ள அத்துடன் அதனால் உரிமம் வழங்கப்பட்டுள்ள சுற்றுலா விடுதிப் பணி வழங்குவோர் பின்வருவனவற்றை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்படுகின்றனர்.
இலங்கைக்கு வெளியே வதியும் ஆட்களுக்கு வழங்கப்பட்ட பணிகளுக்காக வெளிநாட்டுச் செலாவணியில் மாத்திரம் கொடுப்பனவுகளை ஏற்றுக்கொள்ளுதல்.
அத்தகைய வெளிநாட்டு நாணயங்களை மூன்று வியாபார நாட்களுக்குள் சுற்றுலா விடுதிப் பணி வழங்குவோரின் வியாபார வெளிநாட்டு நாணயக் கணக்கிற்கு வைப்புச் செய்தல் அல்லது உரிமம்பெற்ற வங்கியொன்றிற்கு விற்றுவிடுதல் வேண்டும்.
இலங்கைக்கு வெளியே வதியும் அத்தகைய ஆள் இலத்திரனியல் நிதிய மாற்றல் அட்டையைப் (கொடுகடன் அட்டை, பற்று அட்டை, பயண அட்டை போன்றவை) பயன்படுத்தி கொடுப்பனவுகளைச் செய்திருக்கும் சந்தர்ப்பத்தில் கொடுப்பனவுகளை சுற்றுலா விடுதிப் பணி வழங்குவோரின் வியாபார வெளிநாட்டு நாணயக் கணக்கிற்கு வரவு வைத்தல் வேண்டும்.
அதேநேரம், இலங்கைக்கு வெளியே வதியும் ஆட்கள் இலங்கைக்குள் வெளிநாட்டு நாணயத்தினைக் கொண்டு வந்தமைக்கும் அதனை அதிகாரமளிக்கப்பட்ட வணிகர் அல்லது அதிகாரமளிக்கப்பட்ட நாணய மாற்றுநர் ஒருவரினூடாக இலங்கை ரூபாவிற்கு மாற்றிக் கொண்டமைக்கும் மூல ஆவணச்சான்றுகளை அத்தகைய ஆட்கள் சமர்ப்பிப்பதற்குட்பட்டு, இலங்கைக்கு வெளியே வதியும் அத்தகைய ஆட்களுக்கு வழங்கப்பட்ட பணிகள் தொடர்பில் இலங்கை ரூபாவில் செய்யப்படும் கொடுப்பனவுகளை சுற்றுலாவிடுதிப் பணிகளை வழங்குவோர் ஏற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.