பொறுப்புக்கூறல், அரசியல் தீர்வு, மனித உரிமைகள் ஆகிய மூன்று விடயங்களிலும் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை செயல்வடிவில் காண்பதற்கே பிரித்தானியா விரும்புகின்றது என்ற விடயத்தினை அரசாங்கத்தின் அத்தனை தரப்புக்களிடத்திலும் நேரடியாக தெரிவித்துள்ளேன் என்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானியாவின் தென் ஆசிய மற்றும் பொதுநலவாய அமைப்புக்கான அமைச்சர் தரிக் அஹமட் பிரபு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடத்தில் கூறியுள்ளார்.
பிரித்தானியாவின் தென் ஆசிய மற்றும் பொதுநலவாய அமைப்புக்கான அமைச்சர் தரிக் அஹமட் பிரபு விற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான சந்திப்பொன்று வியாழக்கிழமை (20) கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஷாரா ஹல்டனின் இல்லத்தில் நடைபெற்றது.
இந்தச் சந்திப்பின்போது கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், மற்றும் ஊடகப்பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் எம்.பி ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இந்தச் சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிட்ட எம்.ஏ.சுமந்திரன் எம்.பி,
இலங்கைக்கு வருகை தந்துள்ள பிரித்தானியாவின் தென் ஆசிய மற்றும் பொதுநலவாய அமைப்புக்கான அமைச்சர் தரிக் அஹமட் பிரபுவுடன் மிக முக்கியமான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியிருந்தோம்.
குறிப்பாக, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கடந்த கூட்டத்தொடரில் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி பிரித்தானியா தலைமையேற்றி இணை அனுசரணை வழங்கி நிறைவேற்றப்பட்ட பிரேரணையான 46/1இனை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் எவ்விதமான முன்னேற்றகரமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பதை நாம் சுட்டிக்காட்டினோம்.
தற்போதைய அரசாங்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகள், அரசியல் தீர்வு ஆகிய விடயங்கள் தொடர்பில் எவ்விதமான கரிசனைகளையும் கொள்ளாது நடந்துகொள்கின்றமையையும், வழங்கிய வாக்குறுதிகளை மறந்து செயற்படுவதையும் நாம் சுட்டிக்காட்டியிருந்தோம்.
இதன்போது, தான் வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு நேரடியாகவே விஜயம் செய்து நிலைமைகளை அவதானித்ததாகவும், பல்வேறு தரப்பினருடனும் கலந்துரையாடியதன் மூலமாக யதார்த்த நிலைமைகளை உணர முடிவதாகவும் அவர் (அமைச்சர் தரிக் அஹமட் பிரபு) எம்மிடத்தில் தெரிவித்தார்.
அத்துடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தின் பல்வேறு தரப்பினர்களையும் தான் நேரில் சந்தித்த போது, வழங்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் செயல்வடிவில் காணவே பிரித்தானியா விரும்புகின்றது என்ற செய்தியை நேரடியாகவே கூறிவிட்டதாகவும் எம்மிடத்தில் தெரிவித்தார்.
மேலும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அடுத்த மார்ச் மாதக் கூட்டத்தொடரிலும் பிரித்தானியாவே முக்கிய வகிபாகத்தினைக் கொண்டிருப்பதால் தங்களது விஜயத்தின்போது கண்டறியப்பட்ட யதார்த்தமான விடயங்களின் அடிப்படையில் தீர்க்கமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் நாம் கேட்டுக்கொண்டுள்ளோம்.
அதேநேரம், பிரித்தானியாவில் என்னைச் சந்தித்து கலந்துரையாடிய விடயங்களை நினைவு கூர்ந்த அவர் தொடர்ச்சியாக தமிழர்கள் விடயத்திலும் குறிப்பாக பொறுப்புக்கூறல், மனித உரிமைகள், அரசியல் தீர்வு ஆகிய மூன்று விடயங்களிலும் தங்களது கரிசனைகள் இருக்கும் என்றும் அந்த விடயங்களில் மிகக் கடுமையாகவே பிரித்தானியா நிலைப்பாடுகளைக் கொண்டிருக்கும் என்றும் கூறினார்.
இறுதியாக, தொடர்ந்தும் தங்களுடன் பரஸ்பர தொடர்புகளைக் கொண்டிருக்குமாறு கேட்டுக்கொண்டதோடு, நீதிக்கான கோரிக்கைக்கு முழுமையான ஒத்துழைப்புக்களை தாம் வழங்குவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.