கலைகளின் வெளிப்பாடுகள் மூலமே நமது இருப்பை நிலைநிறுத்திக் கொள்ள முடியும் – சிறிதரன்!
15 Jan,2022
பண்பாடுகள், கலைகளின் வெளிப்பாடுகள் மூலமே நமது இருப்பை நிலைநிறுத்திக் கொள்ள முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
வைத்தியர் ஆர.வீ. சசிகரனின் படைப்பில் உருவான “உனக்கும் உதிரம்தானே“ குறும்பட இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு இன்று(வெள்ளிக்கிழமை) கிளிநொச்சியில் அமைந்துள்ள அறிவகத்தில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இன்று சமூகத்தில் தலைதூக்கியுள்ள போதைப் பொருள் பாவனை மற்றும் விபத்துக்கள் என்பன மேலும் சமூகத்தில் நெருக்கடிகளைத் தோற்றுவிக்கின்றன.
எங்களுடைய சமுதாயம் படுகின்ற பல துன்ப நிலைகளையும் கடந்து இவ்வாறான கலைப் படைப்புக்கள் வெளிவருகின்றன.
தொடர்ந்தும் தடைகளையும் இடர்களையும் சந்திக்கின்றோம். அதிலும் போதைவஸ்துப் பாவனை என்ற பெரிய சவாலும் காணப்படுகின்றது. அதனை எவ்வாறு எதிர்கொள்வது, அதிலிருந்து இந்த இளம் சமூகத்தை எவ்வாறு காப்பது என்பது பற்றி சிந்திக்க கூடிய வகையிலே வைத்தியர் சசிதரனின் படைப்பு இன்று உருவாகி இருக்கின்றது.
இவ்வாறான படைப்புக்கள் இளம் சமூத்திடம் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். பண்பாடுகள், கலைகளின் வெளிப்பாடுகள் மூலமே நமது இருப்பை நிலைநிறுத்திக் கொள்ள முடியும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.
கிளிநொச்சி கனகாம்பிகை அம்மன் தேவஸ்தானத்தின் நிர்வாகத்தைச் சேர்ந்த செல்வராஜா தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் பிரதேச சபைகளின் தவிசாளர்கள், சபை உறுப்பினர்கள், கட்சியின் செயற்பாட்டாளர்கள், கலைஞர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்ததுடன் படைப்புக்கு பங்காற்றிய கலைஞர்களும் கௌரவிக்கப்பட்டனர்.