இந்தியாவிடம் இருந்து ரூ.7000 கோடி கடன் பெற இலங்கை பேச்சுவார்த்தை
12 Jan,2022
சீனாவிடம் இருந்து மற்றொரு பெரிய கடனை பெறுவதற்கும் இலங்கை முயற்சித்து வருகிறது.
இந்தியாவிடம் இருந்து சுமார் 7000 கோடி வரை கடன் பெறுவதற்கு இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அந்நாட்டின் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. அனைத்து அத்தியாவசியப் பொருட்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இந்தியாவிடம் இருந்து சுமார் 7000 கோடி கடன் பெறுவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
இந்த வருடத்தில் மட்டும் இலங்கை திருப்ப செலுத்த வேண்டிய கடன் தொகை சுமார் 42,000 கோடிக்கு மேல் உள்ளது. எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அனைத்து கடன்களையும் திரும்பி செலுத்திவிடுவோம் என்ற உறுதி எங்களிடம் இருக்கிறது. இந்தியாவில் வாங்கப்படும் கடன், உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.
பிற நாடுகளிடம் பெற்றுள்ள கடன்களை திரும்பி செலுத்தவும், வர்த்தக உறவை அதிகரிக்கவும் சீனாவிடம் இருந்து மற்றொரு கடனைப் பெறுவதற்கும் இலங்கை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இவ்வாறு அஜித் நிவார்ட் கப்ரால் கூறினார்.