பேரினவாதத்தை ஊக்குவிக்கிறது ராஜபக்ஷ அரசாங்கம்!
09 Jan,2022
இலங்கையில் பல்வேறு அத்தியாவசியப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில் அவற்றை சீர்செய்து நாட்டின் நிர்வாகத்தை சிறப்பாக முன்னெடுத்துச் செல்வதற்குப் பதிலாக, சிறுபான்மையின மக்களை இலக்குவைத்து வெறுப்புணர்வைப் பரப்புவதன் மூலம் பேரினவாதத்தை ஊக்குவிப்பதிலேயே ராஜபக்ஷ அரசாங்கம் கவனத்தைக் குவித்திருக்கின்றது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் விசனம் வெளியிட்டுள்ளது.
நாட்டின் தேசிய ஆங்கிலப் பத்திரிகையொன்றில் 'அரிசிக்கான தட்டுப்பாட்டினால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகள்' என்ற தலைப்பில் வெளியாகியிருந்த ஆசிரியர் தலையங்கத்தை மேற்கோள்காட்டி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கக்கூடிய பதிவிலேயே மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியப்பிராந்தியப்பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நாடு பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கின்ற சூழ்நிலையில், அவற்றுக்குத் தீர்வை வழங்கக்கூடிய வகையிலான சிறந்த தீர்மானங்கள் எவையும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவில்லை. பல வாரங்களாக நீடிக்கும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு வெகுவிரையில் முடிவிற்கு வருவதாகத் தெரியவில்லை.
இதில் தலையீடுசெய்து பிரச்சினைக்குத் தீர்வை வழங்குமாறு பொதுமக்கள் அரசாங்கத்திடம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற போதிலும், எந்தவொரு முன்னேற்றகரமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அந்த ஆசிரியர் தலையங்கத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் வெகுவிரையில் பொதுமக்களின் வீடுகளில் சமைப்பதற்கு அவசியமான பொருட்கள் இல்லாமல்போகக்கூடும் என்பதால், சமையல் எரிவாயுவிற்கான தேவையும் இல்லாமல்போகலாம். குறிப்பாக அத்தியாவசியப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதுடன் அவற்றின் விலைகள் அநேகமான மக்களால் கொள்வனவு செய்யமுடியாத அளவிற்கு உயர்வடைந்துள்ளன.
தற்போது மதுபானம் மற்றும் சிகரெட் மாத்திரமே தட்டுப்பாடின்றிக் கிடைக்கின்றது என்று மேற்படி ஆங்கிலப்பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதுடன், உரப்பற்றாக்குறை காரணமாக விவசாயிகள் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை முன்னெடுத்துச்செல்லமுடியாத நிலையிலிருக்கின்றனர்.
அதன் விளைவாக அரிசி உள்ளடங்கலாக நாட்டின் தேசிய உற்பத்தி வீழ்ச்சிகண்டிருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த ஆசிரியர் தலையங்கத்தை மேற்கோள்காட்டி மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியப்பிராந்தியப்பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் கூறியிருப்பதாவது:
'இலங்கையானது எரிபொருள் உள்ளடங்கலாகப் பல்வேறு அத்தியாவசியப்பொருட்களிலும் கடுமையான பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் நாட்டின் சீரான நிர்வாகத்திலும் மனித உரிமைகளை வலுப்படுத்துவதிலும் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக இன மற்றும் மதரீதியான சிறுபான்மை மக்களை இலக்குவைத்து வெறுப்புணர்வைப் பரப்புவதன் ஊடாக பேரினவாதத்தை ஊக்குவிப்பதிலேயே ராஜபக்ஷ அரசாங்கம் கவனத்தைக் குவித்திருக்கின்றது' என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்