தமிழீழத்திற்கான வரை இது? சீற்றம் கொண்ட ராஜபக்ச தரப்பு
07 Jan,2022
தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வை வழங்கும் நடவடிக்கையில் எமது அரசு அரசு ஈடுபட்டுள்ளது.
ஆனால் தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்களோ எம்மை நாடாமல் சர்வதேசத்தை நாடுவது தான் விசித்திரமாக உள்ளது என்கிறார் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena).
இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைப்பதற்காக தமிழ் பேசும் தரப்புகளின் பொது நிலைப்பாட்டை பிரதிபலிக்கும் ஆவணத்தில், வடக்கு கிழக்கில் தமிழர்களின் கட்சிகளின் தலைவர்கள் மாத்திரம் நேற்று கையொப்பமிட்டனர். இதில் மலையக முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் எவரும் கையொப்பம் இடவில்லை.
இந்த நிலையில் நேற்றிரவு ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,
''மலையக மற்றும் முஸ்லிம் கட்சிகளை தவிர்த்து வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகள் மாத்திரம் கையொப்பமிட்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆவணம் அனுப்பப்படுமாக இருந்தால், அது விடுதலைப் புலிகளின் கனவான தமிழீழத்திற்கான வரைபாகவே இருக்கும்.
தமிழ் பேசும் கட்சிகளுக்கிடையில், அதன் தலைவர்களுக்கு இடையிலான இணக்கப்பாடு இல்லை. ஒற்றுமை இல்லை. இந்தியப் பிரதமருக்கு அனுப்பும் ஆவண விவகாரம் இதைக் காட்டுகின்றது.
வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைச் சேர்ந்த தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் தமிழ் பேசும் கட்சிகளோ அல்லது இந்தியா உள்ளிட்ட நாடுகளோ ஒருபோதும் அரசியல் தீர்வை வழங்காது.
நமது நாட்டின் உள்ள உள்ளகப் பிரச்சினைகளில் தலையிட வெளிநாடுகளுக்கு அனுமதி இல்லை. நாட்டின் அரசு தான் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கும்” என்றார்.