யாழ்ப்பாணம் ஆரிய குளத்தில் மதச் சின்னங்களை திணிப்பதற்கு அரசு முனைந்தால், இறந்தவர்களின் அஸ்தி கரைக்கும் புனித நீர் நிலையாக மாற்ற வேண்டிய நிலை ஏற்படும் என முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக மையத்தில் இன்றுஇடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணம் ஆரிய குளம் எமது பாரம்பரியம் அது சேற்று குப்பைகளுடன் காணப்படும் போது ஒருவரும் திரும்பி பார்க்கவில்லை. அதன் பின்னர் யாழ் . மாநகர சபையின் முயற்சியால், தற்போது அழகாக சீரமைக்கப்பட்டு மக்கள் தமது பொழுது போக்கு நேரத்தை செலவழிப்பதற்காக அங்கு வருகின்றனர்.
ஆனால், வடக்கு மாகாண ஆளுநர் தற்போது தூக்கத்திலிருந்து விழித்தது போல புது புரளியை கிளப்பியுள்ளார் . ஆரிய குளம் மாநகர சபைக்கு சொந்தமானது என ஆவணங்களை சமர்ப்பியுங்கள், சமய சின்னங்கள் தொடர்பாக வெளிப்படுத்துங்கள் என வடக்கு மாகாண ஆளுநர், மாநகர சபைக்கு கடிதம் ஒன்றை தற்போது அனுப்பியுள்ளார்.
அன்று ஆரியகுளம் சீரமைக்கப்பட்டு திறந்து வைக்கும் நிகழ்வுக்கு ஆளுநர் வருகை தந்தபோது, அவருக்கு தெரியவில்லையா இது யாருடைய சொத்து என்று, ஆரிய குளம் எமது சொத்து அதையும் அரசு கையகப்படுத்தப் பார்க்கிறது. எமக்கு தெரியும் வடக்கு மாகாண ஆளுநர் ஜனாதிபதி கோட்டாவின் எடுபிடி, அவர் தன்னுடைய நிர்வாக வேலைகளை மட்டும் பார்க்க வேண்டும் எமக்கு விளையாட்டு காட்ட வேண்டாம்.
மாநகர முதல்வரை பணியவைக்கும் செயற்பாட்டுக்கு தமிழ் மக்கள் துணைபோக மாட்டார்கள். பௌத்த மக்கள் வழிபடுவதற்கு அருகில் நாக விகாரை உள்ளது. போய் வழிப்படட்டும் நாம் அதைப்பற்றி ஏதும் கேட்கவில்லை. கண்டி வாவியில் பிள்ளையார் கோவில் கட்ட விடுவீர்களா? ஏன் இப்போது இங்கு வந்து புது புரளியை ஆளுநர் கிளப்புகின்றார்.
மதச் சின்னங்கள் தொடர்பில் அவர் பிரச்சினை செய்வாரானால், மக்களின் புனித அஸ்தி கரைக்கும் இடமாக ஆரிய குளத்தை மாற்ற வேண்டி வரும். அன்று திறப்பு விழாவுக்கு வருகை தந்தவர் இப்போது விடிய விடிய ராமர் கதை கேட்பது போல , இந்த குளம் யாருடையது என்று கேள்வி எழுப்பினார்.
ஆளுநர் என்னுடன் பகிரங்க விவாதத்துக்கு வர முடியுமா? அவரின் வாகனச் செலவு 58 லட்சம், அதற்கு மேலதிகமாக பாதுகாப்பு பிரிவு, இதுவும் போதாதென்று தான் அணியும் ரீசேட்டுக்கு 7 ஆயிரம் செலவு, மோப்ப நாய்கள் என்று ஆடம்பரமாக ஆளுநர் திரிகின்றார் . அனைத்தும் மக்களின் வரிப்பணத்தில் நடக்கிறது.
அவருக்கு எதற்கு மோப்ப நாய்கள். வெடி குண்டு வைத்து விடுவார்கள் என்று பயமா அல்லது வெடிகுண்டு வைக்க வேண்டும் என எதிர்பார்கிறீர்களா அப்படியானால் போட்டிவைத்து பாருங்கள் வெடிக்குறதா இல்லையா என்று, அதை விடுத்து மக்களை துன்பப்படுத்தாதீர்கள். மக்களின் பிரச்சினையை முதலில் பாருங்கள், சம்பளத்தை எடுத்துவிட்டு முடங்கிக்கிடக்காமல் மக்கள் தேவைகளை அறிந்து செயற்படுங்கள் மதப்பிரச்சினையை தூண்டாதீர்கள்.
வடக்கில் தமிழர்களின் பாரம்பரிய இடங்கள் இந்துமத ஸ்தலங்கள் ஆக்கிரமிக்கப்படும் போது எங்கு சென்றீர்கள்? இப்போதும் தொடர்ந்துகொண்டிருக்கும் ஆக்கிரமிப்புக்கு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? அவை உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா? தேவை இல்லாத வேலை பார்க்காமல் உங்களுக்கு இருக்கும் வேலையை பாருங்கள். ஆளுநரை கட்டுப்படுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுகிறோம். இல்லை என்றால் இவர் போகும் இடம் எல்லாம் பிரச்சினை ஏற்படும் நிலை வரும் எனவும் இதன்போது எச்சரிக்கை விடுத்துள்ளார்.