இலங்கை தமிழர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்க மு.க ஸ்டாலின் உத்தரவு!
02 Jan,2022
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தினை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வரும் 4ஆம் திகதி தொடங்கி வைக்கவுள்ளார். தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பு அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இந்த நிலையில், ஜனவரி 4ம் திகதி முதல் நியாயவிலைக் கடைகளில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட உள்ளது.
பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகைக் கால சமையலுக்கு தேவையான மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் அடங்கிய துணிப்பை மற்றும் கரும்பு (21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு) 2 கோடியே 15 லட்சத்து 48 ஆயிரத்து 60 குடும்பங்களுக்கு, மொத்தம் 1088 கோடி ரூபாய் செலவில் வழங்கப்பட உள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் கடந்த 2 நாட்களாக நடைப்பெற்று வருகிறது.
இந்த நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பினை இடைவிடாமல் தொடர்ந்து விநியோகம் செய்திட ஏதுவாக, நியாய விலைக் கடைகளுக்கான விடுமுறை தினம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.