நாடு கடத்தப்படும் அபாயத்தில் இலங்கை தமிழ் தம்பதி!
31 Dec,2021
.
தமிழகத்தின் திருச்சி இலங்கை தமிழர்கள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கைத் தம்பதி சுவிட்சர்லாந்து செல்ல தங்களை அனுமதி கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீது மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இலங்கையைச் சோ்ந்த கணவன், மனைவி தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, நாங்கள் இலங்கையில் செயல்பட்டு வரும் ஒரு அரசியல் கட்சியில் உறுப்பினா்களாக உள்ளோம்.
நாங்கள் சாா்ந்த கட்சிக்கும், மாற்றொரு அரசியல் கட்சிக்கும் இடையே கடும் மோதல் நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, ஆதரவாளா்கள் சிலா், எங்களைத் தப்பிச் செல்ல அறிவுறுத்தினா்.
இதனால் எங்கள் குழந்தைகளுடன் படகில் தனுஷ்கோடி சென்று, அங்கிருந்து புதுதில்லியை சென்றடைந்தோம்.
சுவிட்சர்லாந்து செல்வதற்காக, புதுதில்லியிலுள்ள வெளிநாடு மண்டல அதிகாரிகளிடம் சென்றபோது, சென்னை பொலிசாரிடம் தடையில்லா சான்று பெற்று வருமாறு கூறினா்.
இதுதொடா்பாக முயற்சி மேற்கொண்டபோது, நாங்கள் சட்டவிரோதமாக இந்தியா வந்ததாகக் கூறி எங்களைக் கைது செய்தனா். இந்த வழக்கில் ஜாமீன் பெற்று, தற்போது திருச்சி சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளோம்.
இந்தியாவிலுள்ள உறவினா்கள், எங்களது குழந்தைகளை பராமரித்து வருகின்றனா். எங்களை இலங்கை நாட்டுக்கு கடத்துவதற்கு வாய்ப்புள்ளது.
அங்கு எங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே, எங்களை நாடு கடத்தத் தடை விதித்தும், சுவிட்சர்லாந்து செல்வதற்கு அனுமதி வழங்கவும் உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மனு குறித்து, மத்திய, மாநில அரசுகள் ஜனவரி 7 ஆம் திகதிக்குள் பதிலளிக்கவும், அதுவரை மனுதாரா்களையும், அவா்களது குழந்தைகளையும் நாடு கடத்தக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.