திருமணம் செய்ய பாதுகாப்பு அமைச்சின் அனுமதி எதற்கு? சென்றது முறைப்பாடு
                  
                     28 Dec,2021
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	 
	ஒருவர் தான் விரும்பும் நபரை திருமணம் செய்து கொள்ள ஏன் வேறொருவரின் அனுமதியை கோரவேண்டும் என சட்டத்தரணி திஷ்யா வெரகொட(Dishya Veragoda) கேள்வி எழுப்பியுள்ளார்.
	 
	இலங்கையர்கள் வெளிநாட்டு பிரஜைகளை திருமணம் செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி தேவைப்படும் என்ற அரசாங்கத்தின் புதிய விதிமுறைகள் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அவர் முறைப்பாடு செய்துள்ளார்.
	 
	இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், “எனது பிள்ளைகளும் வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள். ஒரு நாள் அவர்கள் திருமணம் செய்து கொள்ள விரும்பும் போது, பாதுகாப்பு செயலாளரிடம் அனுமதி கேட்பதை நான் விரும்பவில்லை. அவர்கள் விரும்பும் யாரையும் திருமணம் செய்து கொள்ள யாருடைய அனுமதியும் தேவையில்லை.
	 
	தாங்கள் விரும்பும் நபரை திருமணம் செய்து கொள்ள அவர்கள் ஏன் வேறு நபர்களிடம் அனுமதி பெற வேண்டும்? என கேள்வி எழுப்பினார்.
	 
	புதிய நிபந்தனைகள் சட்டவிரோதமானது, சட்டத்திற்கு புறம்பானது, பகுத்தறிவற்றது, நியாயமற்றது, அபத்தமானது, அதிதீவிரமானவை மற்றும் அரசியலமைப்பிற்கு முரணானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
	 
	இது தொடர்பில் முன்னுரிமையின் அடிப்படையில் விசாரிக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவை அவர் கோரியுள்ளார். 2022 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் கூறப்படும் சுற்றறிக்கையை அமுல்படுத்த வேண்டாம் என பதிவாளர் நாயகத்திற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு கோரிக்கை விடுக்க வேண்டும் எனவும் அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.