ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றை தமிழ் பேசும் மக்களுக்கு எதிராகவே ஞானசார தேரர் பேசுகிறார் என்கிறார் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் ( Mano Ganesan).
நீதி அமைச்சர் அலி சப்ரியை பதவி விலகக் கூறிய ஞானசார தேரரின் கோரிக்கை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், இவரது செயலணியின் பெயரை "ஒரு ஆளுக்கு ஒரு சட்டம்" என தான் பிரேரிப்பதாக கூறியுள்ளார்.
இது குறித்து மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,
''அமைச்சர் அலி சப்ரியை பதவி விலகச் சொல்லும் ஞானசார தேரரை, தனது செயலணிக்கு, இந்த அரச தலைவர் தான் நியமித்தார். அதேபோல அமைச்சர் அலி சப்ரியையும், அமைச்சரவை அமைச்சராக இவரே நியமித்தார்.
இந்நிலையில், அரச தலைவரின் ஞானசாரர், அரச தலைவரின் அமைச்சரை பதவி விலகச் சொல்கிறார். இதென்ன கூத்து?
எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் இப்படிச் சொன்னால் அதில் ஒரு அரசியல் தர்க்கமாவது இருக்கும். இதில் என்ன இருக்கிறது?
ஆனால் இந்த அரசுக்குக்கு உள்ளே சிறுபான்மை அமைச்சரவை அமைச்சர்கள் இருப்பது நல்லது.
அமைச்சர்களான அலி சப்ரி, டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் அங்கே இருப்பதால் தமிழ் பேசும் மக்களின் குறைந்தபட்ச பிரச்சினைகளையாவது அரசாங்க தலைமையின் கவனத்திற்கு கொண்டு வர முடிகிறது.
இந்தக் குறைந்தபட்ச அவகாசத்தையும் கூட தட்டி பறிக்கவே இந்த காவிப் பயங்கரவாதி முயல்கிறார்.
முகநூலில் எதையாவது சிறுபிள்ளைத்தனமாக எழுதி விடும் தமிழ் இளைஞர்களை தேடி வீட்டுக்கு காவல்துறை வருகிறது. இவருக்கு மாத்திரம் விசேட சட்ட விலக்கு இருக்கிறது போல.
ஆகவே தான், இவரது செயலணியின் பெயரை "ஒரு ஆளுக்கு ஒரு சட்டம்" என நான் பிரேரிக்கிறேன்.
இவரது, வாயில் வருவதை எல்லாம் பேசும் நடத்தையை ஆட்சேபித்து, இந்தச் செயலணியில் இருக்கும் தமிழ், முஸ்லிம்கள் உடன் பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.