தமிழ் மக்கள் அல்லலுறும்போதும் நியாயத்திற்காகப் போராடியபோதும் உதவ முன்வராத சீனா இப்பொழுது கரிசனை காட்டுவதுபோல் நடிப்பது பலத்த சந்தேகங்களை எழுப்புகிறது ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம்(வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகத்தின் பொலிஸ்காரனாக தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதில் சீனா முனைப்புடன் செயற்பட்டு வருகின்றது. அதற்காக ஒரே பாதை ஒரே பட்டி, பட்டுப்பாதை போன்ற திட்டங்களை மிகப் பெரும் முதலீட்டில் நடைமுறைப்படுத்தி வருகின்றது.
தென்சீனக் கடற்பகுதியில் இருக்கும் மண் திட்டுக்களை தனது இராணுவ, விமானப்படை தளங்களாகவும் மாற்றி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளுடன் முரண்பாடுகளையும் ஏற்படுத்திக்கொண்டுள்ளது.
அதைப்போலவே இந்துசமுத்திர பிராந்தியத்தில் தனது வல்லாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ளவும் ஒரே பாதை, ஒரேபட்டி திட்டத்தை நடைமுறைப்படுத்திக் கொள்ளவும் இந்துசமுத்திர பிராந்தியத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையையும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. இலங்கையில் தமிழ் மக்களின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் நடந்த காலகட்டத்தில் நாங்கள் சீனாவுடன் பேசியபொழுது, ‘நாங்கள் நாடுகளுக்கிடையிலான உறவுகளை வைத்துக்கொள்வோமே தவிர, உள்நாட்டு விவகாரங்களில் தலையிட மாட்டோம்’ என்று கூறினார்கள்.
அதுமாத்திரமல்லாமல், தமிழ் மக்கள் யுத்த குற்றங்களுக்கும் இனப் படுகொலைக்கும் எதிராக உலக நாடுகளிடம் நீதி கேட்டு சர்வதேச மன்றங்களை அணுகியபோது, அங்கும் தமிழ் மக்களுக்கு எதிராகவும் அவர்களது கோரிக்கைகளுக்கு எதிராகவும் செயற்பட்டு இலங்கை அரசாங்கத்தைக் காப்பாற்றி வந்தார்கள்.
இப்பொழுது, தமிழ் மக்கள்மேல் பரிவுகொண்டவர்கள் போல் நடித்து, மீனவர்களுக்கு உதவி செய்கின்ற போர்வையில், ஒரு தொகுதி வலைகளையும் உலர் உணவுகளையும் கொடுத்த நாடகத்தையும் நாங்கள் அண்மையில் பார்த்தோம்.
வடக்கு மாகாணத்தில் அவர்களது பிரசன்னம் என்பது இந்தியாவைச் சீண்டுவதைத் தவிர வேறெதுவும் இல்லை என்பதை நாங்கள் புரிந்துகொண்டிருக்கிறோம். யுத்த காலத்தில் மிக அதிகளவிலான இராணுவ தளபாடங்களையும் விமானங்களையும் கொடுத்து இலங்கையை தனது பெருங்கடன்கார நாடாக்கிய பெருமை சீனாவையே சாரும்.
ஹம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள விமான நிலையம் போன்றவற்றை நிர்மாணிப்பதற்கு அதிக அளவு முதலீடுகளைச் செய்து, தானே முன்னின்று கட்டுமானப் பணிகளையும் மேற்கொண்டது. வர்த்தக ரீதியில் எத்தகைய இலாபமுமற்ற இந்த முதலீடுகளால் இலங்கையை மேலும் மேலும் கடனாளியாக்கிவிட்டு, சீனா அத்துறைமுகத்தை தனதாக்கிக்கொண்டுள்ளது.
இதனைப் போலவே மத்தள விமான நிலையம், கொழும்பு துறைமுக நகரம், கொழும்பு துறைமுகம் போன்றவற்றில் செய்யப்பட்ட முதலீடுகளினாலும் சீனாவே அதிகளவில் பயனடைகின்றது.
இவ்வாறு இலங்கைக்கு பல பில்லியன் ரூபாக்களைக் கடனாகக் கொடுத்து அதை கடனாளியாக்கிவிட்டு முழு இலங்கையையுமே கபளீகரம் செய்யும் நடவடிக்கைகளில் சீனா இறங்கியிருக்கிறது. இலங்கையில் பல்லாயிரக்கணக்கான சீன தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
சீன உணவகங்கள், வர்த்தக நிலையங்கள் போன்றவை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தன்னை இறைமை மிக்க நாடு என்று கூறிக்கொள்ளும் இலங்கை, இப்படி சீனாவின் சகல நடவடிக்கைகளுக்கும் முகம்சுழிக்காமல் ஆதரவு தெரிவித்து வருகின்றது.
இத்துடன் நிற்காமல், வடக்கு மாகாணத்தை தனது டிராகன் பிடிக்குள் கொண்டுவரும் நோக்குடன், நயினாதீவு, அனலைதீவு, நெடுந்தீவு போன்ற இடங்களில் மாற்று மின்சக்தி நிலையங்களை உருவாக்குவதற்கும் சீனா ஒப்பந்தங்களைச் செய்துள்ளது. இத்துடன் கடல்சார்துறைகளிலும் தனது நாட்டு நிறுவனங்களை முதலீடு செய்ய ஊக்குவிக்கின்றது.
இலங்கையின் வடக்கு-கிழக்கு மாகாணம் என்பது இந்தியாவிற்கு கூப்பிடுதொலைவிலுள்ள ஒரு பிரதேசம். இங்கு சீனர்களின் பிரசன்னம் என்பதோ, முதலீடுகள் என்பதோ இந்தியாவின் பாதுகாப்பிற்கு குந்தகங்களை ஏற்படுத்தும் என்பது சாதாரண ஒரு அரசியல் மாணவனும் புரிந்துகொள்ளக்கூடிய விடயம்.
இவ்வாறான ஒரு சூழ்நிலையில், வடமாகாணத்தில் ஏற்படுத்தப்படும் முதலீடுகளுக்கு இலங்கை சீனாவிற்கு இடமளிப்பதென்பது அடிப்படையில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. கலாசார ரீதியக, மொழி ரீதியாக, சமய ரீதியாக பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்புடையவர்கள் இலங்கை, இந்திய மக்கள்.
குறிப்பாக எமக்கு மிகவும் அண்மித்த பிரதேசமான தமிழகத்தில் எட்டுகோடி தமிழ் மக்கள் வாழ்கின்றனர். ஆகவே இந்தியாவிற்கு எதிராக வடக்கு மாகாண மண்ணை சீனா போன்ற நாடுகள் பாவிப்பதற்கு எந்தவிதத்திலும் அனுமதி அளிக்க முடியாது.
சீனாவின் இத்தகைய நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த வேண்டுமாக இருந்தால், வடக்கு -கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்யக்கூடிய வகையிலும், வடக்கு கிழக்கு மாகாண இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் வகையிலும் உற்பத்திசார் தொழிற்சாலைகளை நிறுவுவதற்கு இந்தியா முதலீடுகளையும் வழிகாட்டுதல்களையும் மேற்கொள்ள வேண்டும்.
அதுமாத்திரமல்லாமல், வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்குத் தேவையான மின்சாரம், குடிநீர், வடிகால் அமைப்பு போன்ற விடயங்களில் தன்னிறைவடைவதற்கும் இந்தியா உதவ முன்வரவேண்டும். பத்தாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள சீனாவை இலங்கைக்குள் உள்நுழைய விட்டு எதிர்காலத்தில் தேவையற்ற சச்சரவுகளை அண்டை நாடுகளுடன் ஏற்படுத்திக்கொள்ளாமல், இலங்கையில் ஏற்படுகின்ற எத்தகைய அனர்த்தங்களிலும் உடனடியாக உதவுகின்ற, எமக்கு அருகில் உள்ள விஞ்ஞான தொழிநுட்ப மற்றும் அறிவுசார் துறைகளில் பாண்டித்தியம் பெற்ற இந்தியாவுடன் உறவுகளை மேம்படுத்திக்கொள்வதே இந்த நாட்டின் நலன்களுக்கு சிறப்பானதாகும் என்பதையும் இலங்கை அரசிற்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
உலக நாடுகளின் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைகளை நிராகரித்துக்கொண்டு, தனது நாட்டில் வாழுகின்ற இஸ்லாமிய சமூகத்தினரின் மனித உரிமைகள் அனைத்தும் மறுதலிக்கப்பட்டு அடிமைகளைவிடவும் கேவலமாக நடாத்திக்கொண்டும் வறுமைப்பட்ட நாடுகளைக் கடனாளிகளாக்கி தமது கைப்பிடிக்குள் கொண்டுவரும் கேவலமான கொள்கையையும் கைவிட்டு அதன் பிறகு ஏனைய நாட்டு மக்கள்மீது அக்கறை செலுத்துவது குறித்து சீனா சிந்திக்க வேண்டும் என்று தெரிவித்துக்கொள்கிறோம்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.