வடக்கு விரைவில் சிங்கள மயமாகி விடும்!
21 Dec,2021
மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறாமல் இன்றைய நிலை தொடர்ந்தால் வடமாகாணம் மிக விரைவில் மத்தியின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு சிங்கள மயமாகி விடும் என சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வாராந்த கேள்வி பதிலில் இந்த விடயத்தை தெரிவித்துள்ள அவர், இந்தநிலை ஏற்பட்டால் சமஷ்டிக்கோ, கூட்டுச் சமஷ்டிக்கோ, சுய நிர்ணய உரிமைக்கோ போராடுவது அர்த்தமற்றதாகப் போய்விடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறாததால் ஒட்டுமொத்த சிறுபான்மையினரும் பாதிக்கப்பட்டுள்ள காரணத்தினாலேயே மலையக மற்றும் முஸ்லீம் தலைவர்களும் தம்மோடு இணைந்துள்ளதாக விக்னேஸ்வரன் கூறினார்.
இன்றைய நிலையில் சட்ட ரீதியாகத் தமிழ்ப் பேசும் மக்களுக்கு இருக்கும் ஒரே பிடிமானம் போதிய அதிகாரமற்ற 13வது திருத்தச் சட்டம் ஒன்றே என்றும் அதை நீக்கினால் மத்திய அரசாங்கம் துணிந்து வடக்கு கிழக்கை ஆக்கிரமித்துவிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஒற்றையாட்சியின் கீழ் எமது அரசியல் பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்காது என குறிப்பிட்ட விக்னேஸ்வரன், சில முக்கிய நடைமுறைப் பிரச்சனைகளை பதின்மூன்றாம் திருத்தச்சட்ட அமுலாக்கத்தின் ஊடாக நாம் கையாளலாம் என கூறினார்.