பிரித்தானிய சிறையில் தமிழர் ஒருவர் மரணம்! அதிகாரிகளே பொறுப்பு
15 Dec,2021
பிரித்தானிய சிறைச்சாலையில் அண்மையில் தமிழர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டமைக்கு அந்நாட்டு அதிகாரிகளே பொறுப்பு என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
கேதீஸ்வரன் குணரட்னம் என்ற இலங்கைத் தமிழர் கடந்த 2018ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18ம் திகதி பிரித்தானிய சிறையில் தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.
இந்த சம்பவம் தொடாபில் சட்ட வைத்திய அதிகாரிகள் விசாரணை நடாத்தியிருந்தனர். இதன் போது உரிய பராமரிப்பு இன்மையினால் கேதீஸ்வரன் உயிரிழந்துள்ளதாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சு, சிறைச்சாலை திணைக்களம், சுகாதார தரப்பினர் ஆகியோர் இந்த மரணத்திற்கு பொறுப்பு சொல்ல வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் சித்திரவதைகளுக்கு அஞ்சி பிரித்தானியாவில் கேதீஸ்வரன் ஏதிலி அந்தஸ்து கோரியிருந்தார் என அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
சிறையில் தடுத்து வைத்து நாடு கடத்துவதாக அச்சுறுத்தியமைக்கு மாறாக அவருக்கு பிரித்தானியாவில் ஏதிலி அந்தஸ்து வழங்கியிருக்க வேண்டுமென அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கேதீஸ்வரனின் மரணத்திற்கு முன்னர் அவரை பராமரிப்பதில் பல நிறுவனங்கள் பொறுப்புக்களிலிருந்து விலகியுள்ளதாக மரண விசாரணை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தற்கொலை செய்து கொள்வதற்கு மூன்று மாதங்கள் முன்னரும் கேதீஸ்வரன் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்திருந்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
நாடு கடத்தப்பட்டால் உயிரை மாய்த்துக் கொள்வதாக கேதீஸ்வரன் உறுதிப்படக் கூறுவதாக சிரேஸ்ட காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தார்.
எனினும், குடிவரவு அதிகாரிகள் இந்த விடயங்களை கவனத்திற் கொள்ளவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உணவு தவிர்ப்பு போராட்டம் மேற்கொண்ட சந்தர்ப்பத்திலும் அவருக்கு உளவள ஆலோசனை வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேதீஸ்வரனின் மரணத்தை தடுத்திருக்கலாம் என மரண விசாரணை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பிரித்தானிய அதிகாரிகளின் அசமந்தப் போக்கினால் இந்த மரணம் இடம்பெற்றுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.