விடுதலைப்புலிகள் பயன்படுத்திய நவீன ரக துப்பாக்கி மீட்பு
                  
                     14 Dec,2021
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	 
	அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை காவல்துறை பிரிவுக்குட்பட்ட காரைதீவு கொம்புச்சந்தி பகுதியில் கைத்துப்பாக்கி மற்றும் 2 மகசின்களை காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை (14)மாலை மீட்டுள்ளனர்.
	 
	இராணுவ புலனாய்வு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் விடுதலைப்புலிகளினால் பாவிக்கப்பட்டதாக நம்பப்படும் வெளிநாட்டு தயாரிப்பான மைக்ரோ 9 எம்.எம். கைத்துப்பாக்கியே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
	 
	காரைதீவு கொம்புச்சந்திக்கருகாமையில் உள்ள வீடொன்றில் காவல்துறையினர் தேடுதலை மேற்கொண்டு இந்த கைத்துப்பாக்கி மற்றும் மகசின்களை மீட்டுள்ளனர்.
	 
	குறித்த வீட்டினுள் குறித்த துப்பாக்கியை தம்வசம் வைத்திருந்ததாக தெரிவிக்கப்படும் 44 வயது மதிக்க தக்க மகாலிங்கசிவம் அசோக் என்ற சந்தேக நபர் கைதாகியுள்ளதுடன் அங்கிருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கி மற்றும் மகசின்கள் சம்மாந்துறை காவல்துறையினர் எடுத்து சென்றுள்ளனர்.
	 
	இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் முன்னெடுத்து வருகின்றனர். கைதாகிய சந்தேக நபர் சிறிது காலம் தாதிய உத்தியோகத்தராகவும் விடுதலைப்புலிகளுடனும் கடந்த காலங்களில் நெருங்கி செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.