சுய மரியாதையை கொண்டுள்ள எந்த தமிழரும் ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியில் அங்கம் பெற முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் கூறினார்.
சுய மரியாதையை கொண்டுள்ள எந்த தமிழரும் ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியில் அங்கம் பெற முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் கூறினார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இந்த அரசாங்கத்தின் நீதி அமைச்சர், ஆப்கானிஸ்தான் கப்பற்துறை அமைச்சர் போன்றதொரு நிலையில் உள்ளார் என கடந்த ஆண்டு நான் கூறியிருந்தேன். அதனையே நான் மீண்டும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். ஏனென்றால் இன்றும் அவர் உறுதியில்லாத நிலையில் இந்த அமைச்சில் உள்ளார்.
நீதி அமைச்சர் தனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்ய முயற்சித்துக்கொண்டுள்ளதாக கடந்த காலங்களில் ஊடகங்களில் அறிந்துகொண்டோம். அவர் தனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்ய முயற்சித்தும் அதனை செய்ய முடியாத நிலையொன்றில் உள்ளார்.
ஆனால் அவரால் அதனை செய்ய முடியும்,எனினும் அதனை எவ்வாறு செய்ய முடியும் என தெரியாத நிலையில் அவர் உள்ளார் என்றே நாம் நினைக்கின்றோம். அதேபோல் நீதி செயற்பாடுகளில் அரசாங்கதின் அனாவசிய தலையீடுகள் காணப்படுகின்றன என்பது தெளிவாக வெளிப்பட்டுள்ளது.
முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னகொடவை வடமேல் மாகாண ஆளுநராக நியமிக்கவுள்ளதாக செய்திகளில் அறிந்துகொண்டேன். காலஞ்சென்ற முன்னாள் ஆளுநர் ராஜா கொல்லுரேவிற்கு பதிலாக இவரை நியமிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காலஞ்சென்ற முன்னாள் ஆளுநர் ராஜா கொல்லுரேவிற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்ளும் அதே வலையில், 11 இளைஞர் கடத்தல் மற்றும் திருகோணமலை கடற்படை முகாமில் அவர்களை கொலை செய்த வழக்கில் வசந்த கரன்னகொட சந்தேகநபராக உள்ளார். அவ்வாறான ஒருவரை சட்டமா அதிபர் அவசர அவசரமாக நியாயப்படுத்தி, அவரது வழக்குகளை நீக்கி அவரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கின்றார்.
இறந்தவர்களின் குடும்பத்தினர் இந்த செயற்பாடுகளுக்கு நியாயம் கோரி போராடிக்கொண்டுள்ள நிலையில் அதற்கான தீர்ப்பு கிடைக்கும் என நீண்ட காலமாக காத்திருந்து ஓரளவேனும் நீதி நிலைநாட்டப்படும் சூழ்நிலை உருவாக்கி வந்த நிலையில் மீண்டும் வழக்கு பின்வாங்கப்பட்டுள்ளது. அவரை ஆளுநராக நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரங்கள் மீளப்பெற்றுக்கொள்ளப்படுகின்றன. சட்டமா அதிபர் உண்மையில் சுயாதீன நபராக இருக்க வேண்டும், அரசியல் நியமனமாக இருந்தாலும் கூட செயற்பாடுகள் சுயாதீனமாக இருக்க வேண்டும். ஆனால் அதனை அவதானிக்க முடியவில்லை.
அதேபோல் நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்த, இன்னொரு வழக்கில் சந்தேகநபராக உள்ள ஒருவரை செயலணி ஒன்றின் தலைவராக அரசாங்கம் நியமித்துள்ளது. இதற்கு நீதி அமைச்சர் எதிர்ப்பை வெளிப்படுத்தியும் அதில் மாற்றம் ஏற்படவில்லை, அதேபோல் தமிழர்கள் இந்த செயலணியில் நியமிக்கப்படவில்லை, அது நல்ல விடயம் என்றே கருதுகின்றேன்.
சுய மரியாதையை கொண்டுள்ள எந்த தமிழரும் இந்த செயலணியில் அங்கம் பெற முடியாது. ஒரு சிலர் தமது சுய மரியாதையை இழந்து இந்த செயலணியில் உள்ளனர். ஆனால் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கொள்கையில் உள்ள இந்த செயலணி ஒரு அநீதியான செயலணியாகும்.
அதிகார பரவலாக்கலை முன்னெடுப்போம் என இந்தியாவிற்கு மூன்று சந்தர்ப்பங்களில் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ வாக்குறுதி வழங்கியுள்ளார். அதேபோல் ஐக்கிய நாடுகள் சபையில் செயலாளர் நாயகத்துடன் இணைந்து வெளியிட்ட அறிக்கையிலும், சர்வதேச சமூகத்திற்கும் தொடர்ச்சியாக இந்த வாக்குறுதியை வழங்கியுள்ளார்.
அதிகார பரவலாக்கலை கண்டிப்பாக முன்னெடுப்போம் என கூறி, 13 ஆம் திருத்தத்தின் மூலமாக இதனை கையாள்வோம், மாகாணசபை முறைமையின் ஊடாக அதிகாரங்களை மாகாணங்களுக்கு பகிர்வோம், மாகாணங்களுக்கு ஏற்ற சட்டங்களை அவர்களே உருவாக்கும் அதிகாரத்தை வழங்குவோம் எனக்கூறி உள்ளக அதிகாரங்களை பரவலாக்கி மேம்படுத்த, மாகாணங்களுக்கு சட்டங்களை மேம்படுத்த, அதிகாரம் வழங்குவதாக உலகத்திற்கு வாக்குறுதி வழங்கிவிட்டு ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கொள்கையை வகுப்பது நியாயமான ஒன்றல்ல. இது தற்போதைய அரசியல் அமைப்பு உருவாக்கத்திற்கு முரணானது மட்டுமல்லாது, சர்வதேசத்திற்கு கொடுத்த வாக்குறுதிகளை மீறும் செயற்பாடாகும்.
ஆகவேதான் இந்த செயலணியில் சுய மரியாதையுடன தமிழர்கள் எவரும் அங்கம் வகிக்க முடியாது, அதுமட்டுமல்ல இந்த செயலணி உருவாக்கப்பட்ட வேளையில் கூட சுயமாக இதற்கு தமிழர்களை ஜனாதிபதி நியமிக்கவில்லை. அப்படியென்றால் அவர்கள் கூற நினைப்பது என்ன? எம்மை பின் சிந்திக்கும் பட்டியலில் வைத்துள்ளார்கள் என்பதேயாகும்.
இந்த நாட்டில் எமக்கும் சம உரிமைகள் உள்ளன, இது எமது நாடு, இங்கு நாம் எந்தவொரு இனத்தவருக்கும் அடுத்த படியான மக்கள் அல்ல. எனவே தான் இதனை நாம் கண்டிக்கின்றோம்.
அதேபோல் நீதி அமைச்சரும் எமது சமூகத்தில் இருந்து வந்தவர் என்ற காரணத்தினால் நீங்கள் இந்த விடயங்களை சிந்தித்து பார்க்க வேண்டும். நீங்கள் இந்த அரசாங்கத்தில் இருந்து கொண்டு உங்கள் சமூகத்திற்கு எதிராக செயற்பட முடியாது, எனவே நீங்கள் அமைச்சுப்பதவியை துறந்து வர வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.