முல்லைத்தீவு கடலில் குளிக்க சென்று காணாமற் போன மூவரும் உயிரிழப்பு!
                  
                     06 Dec,2021
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	 
	வவுனியாவில் இருந்து முல்லைத்தீவு கடற்கரைக்கு  வேனில் சென்ற  மூன்று   இளைஞர்கள் கடலில் குளித்து கொண்டிருந்த போது நேற்று (05) திடீரென  கடலில் மூழ்கியுள்ளனர்.
	 
	குறித்த மூவரையும் நீண்ட நேரமாக காணாத நிலையில் அவர்களுடன் கடலுக்கு சென்ற புதுக்குடியிருப்பை சேர்ந்த  யுவதி  முல்லைத்தீவு பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிசார், கடற்படையினர், பொதுமக்கள் இணைந்து அவர்களை  தேடும் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
	 
	தேடுதலின் போது  ஒருவருடைய சடலம்  நேற்றிரவு மீட்கப்பட்டு முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஏனைய இருவரையும் தேடும் பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தன.
	 
	குறித்த இளைஞர்களில்  மதவுவைத்த குளத்தை சேர்ந்த மனோகரன் தனுஷன்  (வயது_27),  சிவலிங்கம் சகிலன் (வயது_26) , தோணிக்கல் பகுதியை சேர்ந்த  விஜயகுமாரன் தர்சன்  (வயது_26) ஆகியோரே கடலில் மாயமாகியிருந்தனர்.
	 
	நேற்றைய தேடுதலின் போது  ஒருவருடைய சடலம்  மீட்க்கப்பட்ட நிலையில், மற்றுமொருவருடைய சடலம்  இன்று காலை தீர்த்தக்கரை பகுதியில் மீட்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மூன்றாவது நபரின் சடலம் சற்று முன்னர் அளம்பில்  பகுதியில் மீட்கப்பட்டுள்ளது .