இந்தியா விரைகிறது கூட்டமைப்பு
                  
                     04 Dec,2021
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	 
	தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தலைமையிலான தூதுக் குழுவொன்று அடுத்த வாரம் இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது.
	 
	இந்தக் குழுவில் இரா சம்பந்தனுடன் செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் மற்றும் எம். ஏ. சுமந்திரன் ஆகியோர் உள்ளடங்குவதாகக் கூறப்படுகிறது.
	 
	இதுதொடர்பாக இந்திய உயர்ஸ்தானிகரகம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனுடன் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
	 
	இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பொன்றை ஏற்படுத்தித் தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த சிலகாலமாகக் கோரிக்கையை முன்வைத்திருந்தது.
	 
	இது சம்பந்தமாக ஏற்கனவே பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை இந்திய உயர்ஸ்தானிகரகமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நடத்தி வந்தன.
	 
	இதனடிப்படையில் எதிர்வரும் ஓரிரு தினங்களில் இரா சம்பந்தன் தலைமையிலான தூதுக் குழு ஒன்று இந்தியாவுக்குச் செல்லவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.