இலங்கையில் நிலைமை மோசம்!! ஏற்றுக்கொண்டது ஐ.நா
                  
                     04 Dec,2021
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	 
	 இலங்கையில் நுண்கடன் சுமை காரணமாக பெண்கள் பாலியல் தொழிலுக்குச் செல்லும் அபாய நிலை காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் விசேட அறிக்கையாளர் ரொமோயா ஓபோகட்டா (Romoya Obocata) சுட்டிக்காட்டியுள்ளார்.
	 
	இலங்கைக்கு விசேட சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், நேற்றைய தினம் தனது கள ஆய்வு குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே இதனை அவர் குறிப்பிட்டிருந்தார். இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
	 
	“சிறுவர் பணியாளர்கள் நிலை இலங்கையில் தொடர்ந்தும் காணப்படுகின்றது. எனது விஜயத்தின் போது இதனை நான் உறுதிப்படுத்திக் கொண்டேன்.
	 
	சிறுவர் தொழிலாளர்கள் ஆபத்தான, கடினமான, அழுக்குநிறைந்த பகுதிகளில் வேலை செய்துவருகின்றனர். எனவே அரசாங்கம் சிறுவர் பணியாளர்களைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
	 
	பெண்களைப் பொறுத்தமட்டில் பணிபுரியும் இடங்களில் அவர்கள் பாரபட்சத்திற்கு உட்படுத்தும் நிலை காணப்படுகின்றது. மலையகத் தோட்டங்களில் பணிபுரியும் பெண்கள் அதிகமாக வேலை வாங்கப்படுகின்றார்கள். அவர்களின் சக்திக்கு மேல் தொழில் இலக்கு நிர்ணயிக்கப்படுகின்றது.
	 
	மலைய லயன் குடியிருப்புக்களில் வசிக்கும் மக்கள் மிகவும் கஸ்டத்துடன் வாழ்ந்துவருகின்றார்கள். அவர்கள் தமிழர்கள் என்ற அடிப்படையில் பாரபட்சத்திற்கு உள்ளாகும் நிலையும் காணப்படுகின்றது.
	 
	எனவே அரசாங்கம் அவர்களின் வாழ்க்கைக்குத் தேவையான குடியிருப்பு உள்ளிட்ட விடயங்களை செய்து கொடுக்க வேண்டும்.
	 
	ஆடைத்தொழிற்சாலையில் வேலை செய்யும் பெண்களும் சுரண்டலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
	 
	தொழில் நிமிர்த்தம் வெளிநாடுகளுக்குச் செல்லும் பெண்கள் பலர் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் சம்பவங்களும் பதிவாகயுள்ளன.
	 
	ஆகவே அதனைத் தடுக்கும் வகையில் அரசாங்கம் உரிய சட்டப் பொறிமுறைகளை கையாள வேண்டும்.
	 
	நுண்கடன் சுமையினால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாத காரணத்தினால் பாலியல் தொழில் செய்யும் நிர்ப்பந்தத்திற்கு அவர்கள் தள்ளப்படுகின்றார்.
	 
	சில சமயங்களில் பிள்ளைகளையும் பாலியல் தொழிலுக்கு அனுப்பும் துர்ப்பாக்கிய நிலையும் இலங்கையின் கிராம மட்டங்களில் காணப்படுகின்றது” எனக் கூறியுள்ளார்.