பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும், விதிக்கப்பட்டுள்ள தடைகளைத் தாண்டியும் மாவீரர் தினத்தன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் தலைவர்கள், அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
வடக்கு மாகாணசபை முன்னாள் முதலமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான, சி.வி.விக்னேஸ்வரன், தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராசா, வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் ஆகியோர் தமது இல்லத்தில் தீபம் ஏற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கொழும்பில் வைத்து மாவீரர்களுக்கு தனது அஞ்சலிகளை செலுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தனது அலுவலகத்தில் மாவீரர் நினைவுநாள் அனுஷ்டித்துள்ளார். அலுவலகத்தில் தீபமேற்றியும் மெழுகுவர்த்தி கொளுத்தியும் தமது அஞ்சலிகளைச் செலுத்தியுள்ளனர்.இந்த அஞ்சலி நிகழ்வில் உள்ளுராட்சி சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
அம்பாறையில் நாடாளுமன்ற உறுப்பினர் கலையரசன் மாவீரர்களை நினைவு கூர்ந்துள்ளார்.
முல்லைத்தீவு - அளம்பில் பகுதியில், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உயிர்நீத்த உறவுகளுக்காகச் சுடரேற்றி தனது அஞ்சலியை உணர்வெழுச்சியுடன் மேற்கொண்டார்.மேலும் இந்த அஞ்சலி நிகழ்வில் கரைத்துறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன், சமூக செயற்பாட்டாளர் பத்மநாதன் சுபாகரன் ஆகியோர் பங்குகொண்டிருந்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அவரது இல்லத்தில் மாவீரர்களுக்கு ஈகச்சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார். இந்த அஞ்சலி நிகழ்வில் மண்முனை தென் மேற்கு பிரதேசசபை தவிசாளரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்.
சாவகச்சேரியிலுள்ள மாமனிதர் நடராஜா ரவிராஜின் இல்லத்தில் 6.05 மணிக்கு பொதுச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் சாவகச்சேரி பிரதேச சபை உபதவிசாளர் செ.மயூரன், சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர், சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் சி.சிவநேசன் ஆகியோர் தீபம் ஏற்றி அஞ்சலி செய்தனர்.
அஞ்சலி நிகழ்வில் பிரதான ஈகைச்சுடரினை மூன்று மாவீரர்களின் சகோதரன் சிவஞானம் சிவநேசன் ஏற்றி வைத்தார். இதனையடுத்து இராணுவத்தினர், போலீசார், மற்றும் இராணுவ புலனாய்வாளர்களும் ரவிராஜின் வீட்டை சுற்றிவளைத்து வீட்டுக்குள் நுழைந்து தீபமேற்றி அஞ்சலி செலுத்தியவர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டனர்.
பின்னர் சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சம்பவ இடத்திற்கு வருகை தந்து தடைசெய்யப்பட்ட நினைவுச் சின்னங்களை வைத்து அஞ்சலி செலுத்தினார்களா என்று விசாரணை பின்னரே இராணுவத்தினர் அவ்விடத்தில் இருந்து அகன்று சென்றனர்