இலங்கை உள்நாட்டு போர் காரணமாக அகதிகளாக இந்தியாவில் வாழ்ந்து வரும் இலங்கையர்களை மீள நாட்டிற்கு அழைத்து வருவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றார்.
இந்த நிலையில், சென்னையிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்திற்கான பிரதி உயர்ஸ்தானிகர் டி.வெங்கடேஸ்வரனுக்கும், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் கொழும்பில் இன்று (நவம்பர் 26) சிறப்பு பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றது.
இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகளை நாட்டிற்கு மீள அழைத்து வருவது குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக கடற்றொழில் அமைச்சு தெரிவிக்கின்றது.
இந்தியாவிலிருந்து அழைத்துவரப்படவுள்ள இலங்கையர்களுக்கு செய்துக்கொடுக்கப்படவுள்ள வசதிகள் குறித்து பிரதி உயர்ஸ்தானிகர், கடற்றொழில் அமைச்சருக்கு விளக்கமளித்துள்ளார்.
அழைத்துவரப்படவுள்ள இலங்கையர்களுக்கான பயண ஏற்பாடுகள் இலங்கை அரசாங்கத்தினால் இலவசமாக செய்து கொடுக்கப்படவுள்ளது.
அத்துடன், அவர்களின் பொருட்களை ஏற்றி வருவதற்கான ஏற்பாடுகளும் செய்துக்கொடுக்கப்படவுள்ளன.
தமிழகத்தில் வாழும் இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை கிடைக்குமா?
உயிரை பணயம் வைத்து தாயகம் திரும்பும் இலங்கை அகதிகள்
இலங்கைக்கு அழைத்து வரப்படுவோரின் செலவுகளுக்காக, ஒவ்வொரு குடும்பத்திற்கும் முதல் கட்டமாக தலா 30,000 ரூபா வழங்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அழைத்து வரப்படுவோரை தமது பூர்வீக நிலங்களில் குடியமர்த்துவற்கும், அந்த நிலங்களில் சர்வதேச தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் வீடுகளை அமைத்து கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னையிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் பிரதி உயர்ஸ்தானிகரால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைகளுக்கு, அமைச்சர் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.
இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்களை, அவர்களது பூர்வீக நிலங்களின் குடியமர்த்தி, இயல்பு வாழ்க்கையை தொடர்வதற்கு தேவையான ஒத்துழைப்புக்களை வழங்க அரசாங்கம் தயார் எனவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவிக்கிறார்.
பல்வேறு காரணங்களினால் இந்தியாவின் சிறப்பு முகாம்களிலும், சிறைச்சாலைகளிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பாக அவதானம் செலுத்தப்பட வேண்டும் என, பிரதி உயர்ஸ்தானிகரிடம், டக்ளஸ் தேவானந்தா கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் அமைப்பின் பதில்
அகதிகள் தொடர்பிலான உடன்படிக்கையொன்றை இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து கைச்சாத்திடும் பட்சத்தில், தமது தாயகத்திற்கு செல்ல இந்தியாவிலுள்ள பெரும்பாலான இலங்கை அகதிகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக இலங்கை ஏதிலியர் மறுவாழ்வு கழகம் தெரிவிக்கிறது.
இந்தியாவை தளமாகக் கொண்டு இயங்கும் இலங்கை ஏதிலியர் மறுவாழ்வு கழக திருச்சி மாவட்ட ஆலோசகர் செல்வரத்தினம் பிபிசி தமிழுக்கு இதனைக் குறிப்பிட்டார்.
இந்த உடன்படிக்கையில் எவ்வாறான விடயங்கள் கையெழுத்திடப்பட வேண்டும் என இலங்கை அகதிகள் விரும்புகின்றார்கள் என்ற கேள்வி எழுப்பினோம்.
இந்தியாவில் சுமார் 30 வருட காலம் வாழ்ந்துள்ளமையினால், தாயகம் திரும்பும் போது தமக்கு இந்திய அரசாங்கத்தினால் உதவித் திட்டங்கள் வழங்கப்பட வேண்டும் என உடன்படிக்கையில் குறிப்பிடப்பட வேண்டும் என இலங்கை அகதிகள் விரும்புவதாக அவர் கூறுகிறார்.
இந்தியாவில் வழங்கப்படும் ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை, இலங்கையில் குறிப்பிட்ட காலம் தமக்கு தொடர வேண்டும் என்பதும் உடன்படிக்கையில் உள்வாங்கப்பட வேண்டும்.
அத்துடன், ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளை மீள வழங்குவது அல்லது புதிய காணிகளை வழங்குவது குறித்தும் உடன்படிக்கையில் உறுதிப்படுத்த வேண்டும்.
இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் வீட்டுத்திட்டம், தமக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற விடயமும் உடன்படிக்கையில் உள்வாங்கப்பட வேண்டும் என இலங்கை அகதிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இலங்கையின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள தற்போதைய நிலையில், இந்தியாவிலுள்ள அகதிகள் இலங்கையை நோக்கி வருகை தர சற்று அச்சம் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
அதேபோன்று, தமது குடும்பத்தோடு வாழ்ந்து வரும் அகதிகளில் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் முதலில் தாயகம் திரும்பி, அவரது வாழ்வாதாரம் மற்றும் அவர்கள் வாழ்வதற்கான சூழல் ஏற்படுத்தப்பட்ட பின்னர், தமது குடும்பத்தை அழைத்து செல்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகதிகள் கூறுவதாக அவர் தெரிவிக்கிறார்.
இந்த நிலையில், தற்போது 4000 பேர் இலங்கைக்கு வருகை தர இணக்கம் தெரிவத்துள்ளதாக இலங்கை ஏதிலியர் மறுவாழ்வு கழகம் தெரிவிக்கிறது.
இந்தியா முழுவதும் 106 அகதி முகாம்கள் காணப்படுவதாகவும், அவ்வாறான அகதி முகாம்களில் 58,800 பேர் வாழ்ந்து வருவதாகவும் கழகத்தின் ஆலோசகர் கூறுகிறார்.
இவ்வாறு இந்தியாவில் வாழ்ந்து வரும் அகதிகளில், சுமார் 25,000 பேர் இந்திய வம்வாவளியைச் சேர்ந்த மலையக தமிழர்கள் என அவர் குறிப்பிடுகிறார்.
மலையகத்தைச் சேர்ந்த அகதிகளில் பெரும்பாலானோர் நாடு திரும்பவிரும்பவில்லை எனவும், தமக்கு இந்திய பிரஜாவுரிமை வழங்கப்பட வேண்டும் என அவர்கள் கோரி வருவதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
அகதிகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் திட்டம்
இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகளை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருவதாக பிரதமரின் இணைப்பு செயலாளரும், தேசிய நல்லிணக்கம் மற்றும் மறுவாழ்வு அலுவலகத்தின் உறுப்பினருமான செந்தில் தொண்டமான் தெரிவிக்கிறார்.
பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் தனது முயற்சியின் கீழ் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையின் மிக பெரிய தொழில் பேட்டை மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும், தொழில் பேட்டை உருவானதன் பின்னர், இலங்கைக்கு வரும் அகதிகளுக்கான வேலைவாய்ப்பு உறுதிப்படுத்தப்படும் எனவும் அவர் கூறுகிறார்.
அத்துடன், தாயகம் திரும்பும் அகதிகளை மீள தற்காலிக இடங்களில் தங்க வைக்க முடியாது என கூறிய அவர், அகதிகளுக்கான கிராமங்களை அமைக்கும் திட்டத்தை முன்னெடுக்க இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனும், தானும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் குறிப்பிடுகிறார்.
இதன்படி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் இலங்கை ஏதிலியர் மறுவாழ்வு கழகத்தின் ஸ்தாபகர் எஸ்.செ.சந்திரகாசன் ஆகியோருடனும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளதாக செந்தில் தொண்டமான் தெரிவிக்கிறார்.