இந்திய துணை தூதுவர் கார்த்திகை பூ அணிந்தது புலிகளை மீளக் கட்டியெழுப்பும் நடவடிக்கையாம்!
                  
                     26 Nov,2021
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	 
	 
	தமிழீழ விடுதலைப்புலிகளை மீளக்கட்டமைக்கின்ற நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத்தூதுவர் கார்த்திகை மலர் அணிந்த விவகாரம் அமைந்ததாக கிளிநொச்சிப் பொலிஸார் கிளிநொச்சி நீதிமன்றில் சமர்ப்பணம் செய்துள்ளனர்.
	 
	    
	கிளிநொச்சி மாவட்டத்தில் மாவீரர் நினைவேந்தலை மேற்கொள்வதற்கு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டமையை மீள் பரிசீலனை செய்யக்கோரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் நகர்த்தல் பத்திரம் நேற்றைய நாள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பிலான வழக்கு விசாரணை இன்று நடைபெற்றிருந்தது.
	 
	இதன் போது, அண்மையில், யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணை தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள சங்கிலியன் பூங்காவில் கடந்த நவம்பர் 20ம் திகதி நடந்த நிகழ்வில் கார்த்திகைப் பூ சூடிய விவகாரத்தினை நீதிமன்றில் சுட்டிக்காட்டிய பொலிஸ் தரப்பினர், குறித்த செயற்பாடு தமிழீழ விடுதலைப்புலிகளை மீளக்கட்டமைக்கின்ற நடவடிக்கையின் ஒரு பகுதியாகும் என்று தெரிவித்து சமர்ப்பணம் செய்திருக்கின்றனர்.
	 
	இந்த விடயம் குறித்த வழக்கிற்கு தொடர்பில்லாத விடயம் என்று நீதிபதியும் சட்டத்தரணிகளும் தெரிவித்த நிலையில் குறித்த கருத்து பதிவிலிருந்து அகற்றப்பட்டுள்ளது.
	 
	குறித்த விவகாரம் தொடர்பில் இந்தியத் தூதரகம் விளக்க அறிக்கை ஒன்றினை கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தது.
	 
	நீதிமன்றில் நடைபெற்ற சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், நீதிமன்றில், இந்தியத் துணைத்தூதுவர் கார்த்திகைப் பூ அணிந்த விடயத்தை பொலிஸார் தெரிவித்தமை மொட்டம் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சும் போடுவது போன்றதாக இருந்தமையை அவதானிக்க முடிந்ததாகத் தெரிவித்தார்