சிறிலங்காவுக்கு விழுந்த பேரடி -இன்று வெளியான அறிவிப்பு
25 Nov,2021
சிறிலங்கா காவற்துறையினருக்கு பயிற்சி வழங்கும் செயற்திட்டம் முற்றாக கைவிடப்படுவதாக ஸ்கொட்லாந்து காவற்துறை இன்று அறிவித்துள்ளமை சிறிலங்காவுக்கு கிட்டியுள்ள புதிய அடியாக மாறியுள்ளது.
சிறிலங்கா அரசாங்கம் ஒடுக்குமுறைகளை செய்வதாக பிரித்தானியா நேற்று தனது பூகோள மனித உரிமை நிலைமை அறிக்கையில் தெரிவித்த நிலையில் அதற்கு மறுநாள் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் சிறிலங்கா காவற்துறைக்கு பயிற்சி அளிப்பதில் ஸ்கொட்லாந்து காவற்துறை வெளிப்படைத்தன்மையை பேண வேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் வலியுறுத்திய நிலையில் இன்று ஸ்கொட்லாந்து காவற்துறையின் பொறுப்பாளர் இயன் லிவிங்ஸ்ரோன் இந்த முடிவை அறிவித்துள்ளார்.
சிறிலங்கா காவற்துறையினருக்கு பயிற்சி வழங்கும் தமது செயற்திட்டத்தை முற்றாக கைவிடும் இந்தமுடிவு குறித்து சிறிலங்காவில் உள்ள பிரித்தானிய தூதரகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இயன் லிவிங்ஸ்ரோன் குறிப்பிட்டுள்ளார். சிறிலங்கா காவற்துறைக்கு பயிற்சிகளை வழங்கும் திட்டத்தை முடிவுக்கு கொண்டு வருமாறும் அண்மையில் ஸ்கொட்லாந்தின் நீதித்துறை செயலாளர் கீத் பிரவுணிடம், மனிதஉரிமைகள் அமைப்புகள் வலியுறுத்தியுள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா காவற்துறை மேற்கொள்ளும் சித்திரவதைகள், சட்டத்திற்கு புறம்பான கொலைகள் மற்றும் உயர்அதிகாரிகளின் முறைகேடுகள் பற்றிய தகவல்களை மையப்படுத்தி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.