மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வரவேற்று நன்றி தெரிவித்த சீமான்
19 Nov,2021
''நிலத்தை இழந்து, உரிமை இழந்து, உடைமை இழந்து, உறவுகளைச் சாகக்கொடுத்து, ஆதரவற்ற சூழலில் தாய்த் தமிழகத்தை நம்பி வந்துள்ள ஈழச் சொந்தங்களுக்கு க் கரம்கொடுத்து பக்கத் துணையாக நிற்க வேண்டியது தமிழக அரசின் தார்மீகக் கடமை'' : சீமான்
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு தமிழக அரசு 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பினை ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க உத்தரவிட்டுள்ளது. இந்த பொங்கல் தொகுப்பு இலங்கை தமிழர் முகாமில் உள்ள தமிழர்களுக்கும் வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனை வரவேற்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-
தமிழகத்தின் மறுவாழ்வு முகாம்களில் தங்கியுள்ள ஈழச்சொந்தங்களுக்கு பொங்கல் பொருட்களை வழங்குவதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கின்ற செய்தியறிந்தேன். நிலத்தை இழந்து, உரிமை இழந்து, உடைமை இழந்து, உறவுகளைச் சாகக்கொடுத்து, ஆதரவற்ற சூழலில் தாய்த் தமிழகத்தை நம்பி வந்துள்ள ஈழச் சொந்தங்களுக்கு க் கரம்கொடுத்து பக்கத் துணையாக நிற்க வேண்டியது தமிழக அரசின் தார்மீகக்கடமையாகும்.
பெரும் பொருளாதார நலிவு நிலையிலிருக்கும் ஈழச்சொந்தங்களுக்கு ஆறுதலளிக்கும் விதத்தில், பொங்கல் திருநாளைக் கொண்டாடுவதற்கு ஏதுவாகப் பொருட்களை வழங்குவதாகக் கூறியிருக்கும் தமிழக அரசின் அறிவிப்பை வரவேற்கிறேன். அதற்கு எனது உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்!
தமிழக அரசு வழங்க உள்ள பொங்கல் தொகுப்பில் சர்க்கரை பொங்கல் செய்வதற்கு தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு உள்ளிட்ட பொருட்கள் இடம் பெற்றிருக்கும். மொத்தம் இரண்டு கோடியே 15 லட்சத்து 48 ஆயிரத்து 160 குடும்பங்களுக்கு பொங்கல் தொகை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இதற்காக தமிழக அரசு 88 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. இதில் கரும்பு இடம்பெறவில்லை என்ற சர்ச்சை சமீபத்தில் கிளம்பியது. அதற்கு விளக்கம் அளித்த தமிழக அரசு கரும்பும் சேர்த்து வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தது.