யாழ்ப்பாணத்திலும் மாவீரர் நாள் நிகழ்வுகளுக்குத் தடை!
19 Nov,2021
யாழ்ப்பாணத்தில் மாவீரர் நாள் நிகழ்வுக்குத் தடை விதிக்கக் கோரி, பொலிஸாரினால் முன்வைக்கப்படண விண்ணப்பத்துக்கு, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
கோப்பாய், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், சார்பில் இந்த மனுக்கள் இன்று(வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டன.
முன்னர் கோப்பாயில் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த இடத்தில் அமைந்துள்ள இராணுவத்தின் 512 பிரிகேட் தலைமையகத்துக்கு முன்பாகவும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சூழலிலும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய எல்லையிலும் மாவீரர் நாளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், அந்த மனுவில் கூறப்பட்டது.
குற்றவியல் சட்டத்தின் 120ஆவது பிரிவுக்கு அமையவும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் படியும், இந்த நிகழ்வை நடத்துவது குற்றம் என்றும் இதனைத் தடை செய்யுமாறும் பொலிஸார் கோரியுள்ளனர்.
இந்த மனு இன்று யாழ்ப்பாணம் நீதிமன்ற பதில் வி.ரி. சிவலிங்கம் முன்பாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது நாளை மறுதினம் 21ஆம் திகதி தொடக்கம் வரும் 28ஆம் திகதிவரை ஒரு வாரத்துக்கு நடத்த தடை உத்தரவு நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.