இந்தியத் தூதுவருடன் கூட்டமைப்பு எம்.பிக்கள் சந்திப்பு!
                  
                     12 Nov,2021
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	 
	இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவினருக்கும் இடையில் நேற்று முக்கிய சந்திப்பு நடைபெற்றது.
	 
	    
	கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவரின் இல்லத்தில் மாலை 5 மணி முதல் 7 மணிவரை இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
	 
	கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் அவரும், வெளிநாட்டுக்கான தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டுள்ள காரணத்தால் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரமும், உறவினரின் மரணவீட்டுக்குச் சென்ற காரணத்தால் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கமும் இன்றைய சந்திப்பில் பங்கேற்கவில்லை.
	 
	இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும் இன்றைய சந்திப்பில் கலந்துகொண்டனர்.
	 
	வடக்கு, கிழக்கின் தற்போதைய நிலைமை, இந்தியாவின் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், மாவட்ட ரீதியிலான தனித்தனியான துரித அபிவிருத்திச் செயற்பாடுகள் மற்றும் நீண்டகால அபிவிருத்தி நலத்திட்டங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
	 
	இந்திய வீட்டுத்திட்டம் உள்ளிட்ட முக்கிய காரணிகள் குறித்தும் இதன்போது பேசப்பட்டன.
	 
	இந்திய - இலங்கை மக்களுக்கு இடையிலான தொடர்பாடல், இராமேஸ்வரம் படகு சேவை, பலாலி விமான நிலைய அபிவிருத்தி, காங்கேசன்துறை அபிவிருத்தி குறித்தும் முக்கியத்துவம் கொடுத்து இதன்போது கலந்துரையாடப்பட்டன.
	 
	புதிய அரசமைப்பு தொடர்பிலும் இதன்போது பேசப்பட்டது.