அரசாங்கம் அதன் அரசியல் பலத்தையும் படைகளின் ஆதிக்கத்தையும் ஒன்றுதிரட்டி, இதுவோர் சிங்கள பௌத்த நாடு என்று நிறுவுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றது. அதன்பிரகாரம் தமிழர்களின் பூர்வீக வாழ்விடங்களில் பௌத்த சிதைவுகள் இருப்பதாகக்கூறி முன்னெடுக்கப்பட்டுவரும் அகழ்வாராய்வுகளும் இலங்கையை தனிச்சிங்கள பௌத்த நாடாகப் பிரகடனப்படுத்துவதற்கானதோர் முன்நகர்வேயாகும் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெடுக்குநாறி மலையில் அண்மைக்காலமாகவே இந்துக்கோவில் என்ற ரீதியில் பூஜைகள் இடம்பெற்று வருகின்றன.
ஆனால் முன்னர் அங்கு பௌத்த விகாரைகளின் சிதைவுகளே காணப்பட்டதாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனுர மானதுங்க தெரிவித்துள்ளார்.
அதேவேளை காரைநகர் பகுதியில் பௌத்த தொல்பொருள் சிதைவுகள் காணப்படுவதாகக்கூறி, தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் அங்கு சென்றிருந்ததாகவும் அதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை வெளிக்காட்டியதாகவும் செய்திகள் வெளியாகிருந்தன.
தமிழ் மக்களின் பூர்வீக வாழ்விடங்களான வட, கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும் பௌத்த சின்னங்களும் சிதைவுகளும் இருப்பதாகக்கூறி தொல்பொருள் திணைக்களத்தினால் அகழ்வாராய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், தமிழ் மக்களின் பூர்வீக வாழ்விடங்களைப் பாதுகாப்பதற்கும் அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் முன்னெடுத்துள்ள நகர்வுகள் குறித்து வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரசாங்கம் அதன் அரசியல் பலத்தையும் படைகளின் ஆதிக்கத்தையும் ஒன்றுதிரட்டி, இதுவோர் சிங்கள பௌத்த நாடு என்று நிறுவுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
எனவே தமிழர்களின் பூர்வீக வாழ்விடங்களில் பௌத்த சிதைவுகள் இருப்பதாகக்கூறி முன்னெடுக்கப்பட்டுவரும் அகழ்வாராய்வுகளும் இலங்கையை தனிச்சிங்கள பௌத்த நாடாகப் பிரகடனப்படுத்துவதற்கான முன்நகர்வேயாகும். வரலாற்று ரீதியான சான்றாதாரங்களின் அடிப்படையில் நோக்குகையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நாகர்வழிவந்த தமிழர்களே பூர்வீக குடிகளாக வாழ்ந்திருக்கின்றார்கள்.
அதுமாத்திரமன்றி வரலாற்றைப் பொறுத்தமட்டில் ஆரம்பகாலங்களில் தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்ததாக அடையாளங்காணப்பட்டிருக்கின்றது. அவ்வாறிருக்கையில் மஹிந்ததேரர், சங்கமித்தை போன்றோரின் இலங்கைக்கான வருகை உள்ளடங்கலாக சிலகுழுக்களின் வருகையைக் காரணங்காட்டி, இலங்கையை ஓர் சிங்கள பௌத்த நாடாக நிறுவ முயற்சிக்கின்றார்கள்.
மறுபுறம் கடந்த காலங்களில் வரலாற்றாசிரியர்களாலும் தொல்லியலாளர்களாலும் எமது நாட்டின் தென்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வரலாற்று ரீதியான ஆய்வுகள் மற்றும் அகழ்வாராய்வுகளுக்குச் சமளவிலான ஆய்வுகள் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் மேற்கொள்ளப்படவில்லை.
அதுமாத்திரமன்றி தமிழர்களின் பூர்வீக வாழ்விடங்கள் குறித்த தொல்லியல் சான்றாதாரங்களையும் கருத்துக்களையும் வெளியிடுவதற்குப் பலரும் தயங்குகின்றார்கள். மறுபுறம் இலங்கையில் தமிழர்களின் பூர்வீகம் தொடர்பில் புலம்பெயர் தமிழர்களால் எழுத்தப்படும் புத்தகங்கள் மற்றும் ஆவணங்களில் உண்மையான தகவல்கள் திரிபுபடுத்தி எழுதப்படுகின்றன. ஆகவே எமது அடையாளத்தை நிலைநிறுத்துவதற்கான முயற்சிகளின்போது நாம் இவ்விடயங்கள் குறித்தும் கரிசனைகொள்ளவேண்டியிருக்கின்றது என்று குறிப்பிட்டார்.