13வது திருத்தச் சட்டத்தின் கீழ் வரும் மாகாணசபையின் முதல்வர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதால் அவரே மாகாணத்தின் முதல் குடிமகன் ஆவார். அந்த விதத்தில் அதிகாரங்கள் குறைந்திருப்பினும் அவரின் பதவி முக்கியத்துவம் பெறுகின்றது என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நீதியரசருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
13வது திருத்தச்சட்டத்தின் கீழ் முதல்வர் பதவி முக்கியமானதா? அவரின் கடமைகள் என்ன? என்ற கேள்விக்கு இவ்வாறு பதிலளித்துள்ள அவர் இதனை தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் பேசும் மக்களின் நிலை நாளாந்தம் வருத்தத்திற்கிடமாகி வருகின்றது. ஏற்கனவே கிழக்கில் சிங்கள மக்களின் தொகை 800 சதவிகிதத்திற்கு மேல் அதிகமாகியுள்ளது. முஸ்லீம் மக்களின் சனப்பெருக்கம் மற்றைய இனங்களைவிட அதிகமாகிக் கொண்டிருக்கின்றது என்று புத்த பிக்குமார்கள் அங்கலாய்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இந்த நிலையில் கிழக்கின் முதல்வர் ஒருவரின் கடமைகள் வடக்கு முதல்வரின் கடமைகளிலிருந்து வேறுபட்டவை. ஆகவே நான் கூறப்போவது வடக்கு மாகாணசபை முதல்வருக்கே பொருந்தும். 13வது திருத்தச் சட்டத்தின் கீழ் வரும் மாகாணசபையின் முதல்வர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதால் அவரே மாகாணத்தின் முதல் குடிமகன் ஆவார்.
அந்த விதத்தில் அதிகாரங்கள் குறைந்திருப்பினும் அவரின் பதவி முக்கியத்துவம் பெறுகின்றது. மாகாண ஆளுநர் ஜனாதிபதியின் விருப்பு வெறுப்புகளுக்குக் கட்டுப்பட்டவர். அவர் வடமாகாண மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவரல்ல.
எனினும் மாகாணத்தில் மத்தியானது ஊடுருவ சட்டப்படி அவரே பொறுப்பாய் இருக்கின்றார். இப்போதைய ஆளுநர் மிக நல்ல மனிதர். மனித உரிமை மீறல்களை முன்னர் கண்டித்து வந்தவர். மனித நேயம் பொருந்தியவர்.
ஆனால் அவரால், தனது நியமிக்கும் அதிகாரிக்கு எதிராகவோ அவரின் எதிர்பார்ப்புகளுக்கு எதிராகவோ எதையுஞ் செய்ய முடியாது. எனவே முதல்வரே மாகாண மக்களின் அடையாளம். அவர் நடந்து கொள்ளும் விதமே மாகாண மக்களை அடையாளப்படுத்தும்.
அடுத்து, அவரின் கடமைகள் வெறுமனே மாகாண அரசாங்கத்தை மாகாணசபையில் பிரதிநிதித்துவப்படுத்துவதோ, எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பதோ, மாகாண திணைக்களங்களை நிர்வகிப்பதோ அல்லது மாகாண அமைச்சர்களுடன் கலந்துரையாடி கொள்கை ரீதியான தீர்மானங்களை எடுப்பது மட்டுமோ அல்ல.
இன்றைய கால கட்டத்தில் வடமாகாண மக்கள் போர் ஒன்றின் கோரப்பிடிக்குள் இருந்து வெளிவந்திருப்பதாலும் அவர்களின் அரசியல் எதிர்காலம் கேள்விக் கிடமாக இருப்பதாலும், பொருளாதார அபிவிருத்தி ஸ்தம்பித்து நிற்பதாலும் முதல்வரின் கலந்துரையாடல்கள், கருத்துப் பரிமாற்றங்கள், மக்களின் பிரச்சனைகள் பற்றிய அவரின் மதிப்பீடுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
என் அபிப்பிராயப்படி தமிழ் மக்களின் விமோசனத்தை முன்னிட்டு வெளிநாட்டுப் பிரமுகர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள், ஐக்கியநாட்டு அலுவலர்கள், தொழிற்துறை நிபுணர்கள், மத்திய அமைச்சர்கள், மத்திய திணைக்கள அதிகாரிகள் போன்றவர்களுடன் முதல்வர் நடாத்தும் கருத்துப் பரிமாற்றங்களே முக்கியமானதாவன. இதன் பொருட்டு முதல்வருக்கு மும்மொழிப் புலமை இருக்க வேண்டும்.
என் பதவிக் காலத்தில் வடமாகாணத்தில் நடந்தவை, நடப்பவை சம்பந்தமான ஆவண ரீதியான பல தரவுகளை ஐக்கிய நாடுகள் பிரதிநிதிகள் உட்பட நான் பலருக்குக் கொடுத்துதவினேன். இவை நல்ல பலன்களைக் காலா காலத்தில் ஏற்படுத்தின என்பதற்கு அத்தாட்சிகள் உண்டு. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர்கள் தமது நன்றியையும் தெரியப்படுத்தி இருந்தனர்.
தொழிற்துறை நிபுணர்கள் வரும் போது அவர்கள் கூறுவதை உணரும், கிரகிக்கும் தகைமை முதல்வருக்கு இருக்க வேண்டும். இவற்றைக் கேட்கும் பொறுப்பை வெறுமனே மாகாணத் திணைக்கள அலுவலர்களிடம் கையளித்துவிட்டு பொம்மைகளாக இருந்து முதல்வர்கள் பார்த்துக் கொண்டு இருத்தல் ஆகாது.
உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்றவற்றின் அலுவலர்கள் வரும் போது அவர்கள் செய்யவிருப்பதை மதிப்பீடு செய்து எமது மக்களின் நலன் கருதி கருத்துப் பரிமாற்றங்களில் ஈடுபட முதல்வர் தகைமை கொண்டிருக்க வேண்டும். மத்திய அமைச்சர்களோ, திணைக்கள பிரதானிகளோ, வடமாகாண மக்களின் பிரதிநிதியாக வரும் முதல்வரை மதிக்கத்தக்கதாய் அவர் நடந்து கொள்ள வேண்டும்.
மற்றைய பல மாகாண முதலமைச்சர்களை, அமைச்சர்கள், திணைக்களப் பிரதானிகள் மதிக்காது நடந்து கொண்டதை நான் கண்டுள்ளேன். அவ்வாறு மதிக்காது நடத்தப்பட்டதால் குண்டர்கள் போல் மாகாண முதலமைச்சர்கள் சிலர் நடந்து கொண்டதையும் நான் கண்டுள்ளேன்.
அமைச்சர்களிடமோ திணைக்களத் தலைமை அலுவலர்களிடமோ நாங்கள் எம் மக்கள் சார்பில் கோரிக்கைகளை முன்வைக்கலாம். ஆனால் இரந்து கேட்கக்கூடாது. அது முதல்வரின் ஆளுருவ நடவடிக்கைகளிலேயே தங்கி இருக்கின்றது. இரந்து கேட்பவர்களுடன் மத்திய அலுவலர்கள்; நட்புரிமை பாராட்டுவார்கள். யாழ்ப்பாணப் பொருட்கள் கேட்பார்கள். ஆனால் எம்மவரை மதிக்கமாட்டார்கள். மேலும் மாகாண திணைக்களப் பிரதானிகளுடனும் முதல்வர் நடந்து கொள்ளும் விதம் முக்கியமானது. தனது கட்சிக்கோ, கட்சியின் ஆதரவாளர்களுக்கோ சட்டத்தை மாற்றி நடைமுறையை மாற்றிப் பிறழ்வாக நடந்து கொள்ளும் படி முதல்வர்கள் ஆணைகள் பிறப்பித்தல் ஆகாது.
மாகாணசபை நிர்வாகத்தைக் கட்சி நன்மைக்காகவோ தன் சுய நன்மைக்காகவோ பாவித்தல் ஆகாது. இவ்வாறு நான் பக்கச்சார்பின்றி நடந்து கொண்டதால்தான் எனது முதலமைச்சர் அமைச்சானது 2016ல் இலங்கையின் அனைத்துத் திணைக்களங்கள், அமைச்சுக்கள் (பிரதம மந்திரியின் அமைச்சு உட்பட) ஆகியவற்றுள் நிதி நிர்வாகத்தில் முதலிடம் பெற்றது.
மேலும் முதலமைச்சர் மக்களின் இதயங்களைப் புரிந்து கொள்ளக்கூடிய ஒருவராக இருக்க வேண்டும். எந்த மட்டத்து மக்களுடனும் அன்பாகப் பேசிப் பழகி அவர்கள் குறைகளைத் தீர்க்கக் கூடியவராக இருக்க வேண்டும். மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கும் உதவி என்று வரும் போது மனிதாபிமான முறையில் உதவி செய்ய முன்வர வேண்டும்.
நாள் தோறும் வரும் பல கடிதங்கள், தொலைபேசி வேண்டுதல்கள் போன்றவற்றிற்குப் பதில் அனுப்ப வேண்டும். என் பதவிக் காலத்தில் வாரத்தின் ஒவ்வொரு நாளும் நான் 15 தொடக்கம்18 மணித்தியாலங்கள்; மக்கள் சேவையிலேயே ஈடுபட்டேன்.
ஆகவே தொடர் வேலையில் ஈடுபடக் கூடிய பாங்கு முதலமைச்சருக்கு இருக்க வேண்டும். எனவே முதல்வர் என்பவர் பல் துறை விற்பன்னராக இருக்க வேண்டும். மக்கள் மனம் அறிந்தவராக இருக்க வேண்டும். நேர்மை உடையவராக இருக்க வேண்டும். சுயநலம் துறந்தவராக இருக்க வேண்டும். மாகாண மக்களின் வருங்காலம் பற்றிய சிந்தனையில் எந்நேரமும் ஊறியவராகவும் இருக்க வேண்டும்.
இவ்வாறில்லாமலும் முதலமைச்சர் கடமைகளை எவர் தானும் இயற்றலாம். ஆனால் அவர்கள் மக்களால், அலுவலர்களால் வெளிநாட்டுப் பிரதிநிதிகளால் வெளிப்படுத்தப்பட்டு அடையாளப்படுத்தப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.