நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகல கொண்டாட்டம்
04 Nov,2021
இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இந்துக்களின் புனித பண்டிகையான தீபாவளி ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் அமாவாசை திதியில் கொண்டாடப்படுகிறது.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அதிகாலையிலேயே தீபாவளி களைகட்டத் தொடங்கியது. காலையில் எழுந்து நீராடிவிட்டு பூஜைகள் செய்து, புத்தாடை அணிந்து குடும்பத்தினருடன் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். கோவில்களுக்கு சென்றும் பலர் வழிபாடு செய்கின்றனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. பக்தர்கள் அதிகாலை முதலே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். கோவிலுக்குள் பக்தர்கள் தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும் பல்வேறு இடங்களில் தனிமனித இடைவெளியின்றி மக்கள் செல்வதை பார்க்கமுடிகிறது.
மதுரை மீனாட்சியம்மன், தஞ்சை பெரிய கோயில், புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில்களில் பக்தர்கள் சாமி தரிசனம். மேலும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோயிலிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காலையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ததால் பட்டாசு வெடிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
கோவா மாநில தலைநகர் பனாஜியில் இன்று நரகாசுரன் உருவ பொம்மைகளுக்கு தீவைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை ஏராளமானோர் கண்டுகளித்தனர்.
கொரோனா பெருந்தொற்று கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைவாக இருந்தபோதிலும், கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பில் இருந்து பலர் இன்னும் மீளவில்லை. எனவே ஒருசில பகுதிகளில் பொதுமக்கள் எளிமையாக தீபாவளியை கொண்டாடுகின்றனர்.
இதேபோல் உலகம் முழுவதிலும் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினரும் தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்கின்றனர்.