போரின் இறுதிக் கட்டத்தில் உண்மையில் என்ன நடந்தது? எரிக் சொல்ஹெய்ம்
03 Nov,2021
போரின் இறுதி நாட்களில் விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர்கள் சிறிலங்கா படைகளிடம் சரணடைய விரும்பும் விடயத்தை தன்னிடம் தெரிவித்ததாகவும், அதனை தாமே பசில் ராஜபக்சவிடம் தெரிவித்தாவும் கூறிகிறார் சிறிலங்காவுக்கான முன்னாள் சமாதானத்தூதரும், நோர்வேயின் சர்வதேச மேம்பாட்டு அமைச்சருமான, எரிக் சொல்ஹெய்ம் (Erik Solheim).
சஞ்சிகை ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலில், போரின் இறுதிக் கட்டத்தில் உண்மையில் என்ன நடந்தது? போரின் இறுதி நாட்களில் விடுதலைப் புலிகள் எவ்வாறு உலகுடன் தொடர்பு கொண்டார்கள் போன்ற வினாக்களுக்கு பதில் வழங்கும் போது அவர் அவ்வாறு கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் பதில் வழங்கிய அவர்,
“என்னிடம் விசேடமான தகவல்கள் எதுவும் இல்லை. போரின் கடைசி நாட்களில், வட கிழக்கில் ஒரு சிறிய பகுதியில் விடுதலைப் புலிகள் கட்டுப்படுத்தப்பட்டிருந்தனர்.
2009 மே 17 அன்று – வெள்ளைக்கொடி சம்பவதிற்கு முன் – விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகத் தலைவர் [சீவரத்தினம்] புலிதேவன் எங்களுக்கு அழைப்பு விடுத்து அவரும் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் [ பாலசிங்கம் ] நடேசனும், இலங்கைப் படைகளிடம் சரணடைய விரும்புவதாகவும் அதில் நாங்கள் சம்பந்தப்பட வேண்டும் என்றும் கூறினார். அதற்கு தாமதமாகிவிட்டது என்று நாங்கள் சொன்னோம்.
யுத்தத்தை சமாதானமான முறையில் முடிவுக்கு கொண்டுவர பல சந்தர்ப்பங்களில் நாங்கள் முன்மொழிந்தோம். ஆனால் அப்போது எங்களால் அதிகம் செய்ய முடியவில்லை, ஏனென்றால் நாங்கள் களத்தில் இல்லை.
ஆனால், விடுதலைப் புலிகளின் சரணடையும் எண்ணம் குறித்து அப்போதைய அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரர் பசில் ராஜபக்சவிடம் தெரிவிப்பதாக உறுதியளித்தோம். அதேபோலவே அன்றைய தினம் பிற்பகல் அரச தலைவரிடம் இதனைத் தெரிவித்தோம்.
எனவே, நடேசனும் புலிதேவனும் சரணடையும் எண்ணப்பாட்டை அரசாங்கம் நன்கு அறிந்திருந்தது” என்றார்.