சிறிலங்காவுக்கு புலம்பெயர் தமிழர்கள் வழங்கியுள்ள செய்தி
01 Nov,2021
ஐ.நாவின் காலநிலை மாற்றம் தொடர்பாக பிரமாண்டமான அனைத்துலக மாநாட்டை மையப்படுத்தி சிறிலங்காவில் தமிழினத்தின் மீது இடம்பெற்ற இனப்படுகொலைக்கு நீதிகோரி மீண்டும் ஒரு வெற்றிகரமான போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
இதன்மூலம், தமிழனத்தின் மீது நடத்தப்பட்ட இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்குரிய குற்றவாளிகள் நீதியின் முன்னால் நிறுத்தப்படும் வரை புலம்பெயர் தமிழர்களின் எதிர்வினைகள் தணியப்போவதில்லை என்ற தீவிரமான செய்தி வழங்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா அரசாங்கத்துக்கு அனைத்துலக அரங்கில் மிகப்பெரிய அவமானத்தை வழங்கும் கொட்டொலிகள் மற்றும் பதாதைகளுடன் இன்றைய போராட்டங்கள் இடம்பெற்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து மேலும் தெரிய வருகையில், தமிழர் தாயகத்துக்கு நீதிகோரும் வகையில் மீண்டும் ஒரு போராட்ட களம் ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் இடம்பெற்றது.
நீண்டதூரம் பயணம் செய்து லண்டன் உட்பட்ட நகரங்களில் இருந்து சென்ற ஆயிரக்கணக்காக புலம்பெயர் தமிழ்மக்கள் தமது தூக்கம் மற்றும் களைப்பை மறந்து குளிரான காலநிலைக்கு மத்தியில் இந்தப்போராட்டத்தில் இன்று உணர்வு பூர்வமாக பங்கெடுத்திருந்தனர்.
தமிழினத்தின் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு சிறிலங்கா அரசதலைவர் கோட்டாபய ராஜபக்ச பொறுப்புக்கூறவெண்டும் என்ற கொட்டொலிகள் அங்கு தீவிரமாக ஒலித்துள்ளன.
தமிழினத்தின் மீது நடத்தப்பட்ட இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கு உரிய குற்றவாளிகள் நீதியின் முன்னால் நிறுத்தப்படும் வரை புலம்பெயர் தமிழர்களின் எதிர்வினைகள் தணியப்போவதில்லை என்ற தீவிரமான செய்திகளும் அங்கு விடுக்கப்பட்டிருந்தன.
இன்று காலை மாநாட்டு மண்டபத்துக்கு அருகாமையில் போராட்டம் ஆரம்பிக்க முன்னரே, சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது குழுவினர் தங்கியிருந்த கிளாஸ்கோ ஹல்ரன் டபுள் றீ நட்சத்திர விடுதியில் ஒரு திடீர் முற்றுகைப்போராட்டம் வெடித்திருந்தது.
ஆயினும் முற்பகல் வேளையில் அதிகளவு பிரித்தானிய காவற்துறையினரின் பாதுகாப்பு வளையத்துடன் கோட்டாபயவும் அவரது குழுவும் மாநாட்டு மண்டபத்துக்கு கொண்டுசெல்லபட்டிருந்தனர்.
இதனையடுத்து கோட்டாபய தங்கியிருந்த நட்சத்திரவிடுதி முன்றலில் முற்றுகைப்போராட்டத்தை நடத்திய மக்கள், உடனடியாக மாநாட்டு மண்டபத்துக்குத் திரும்பி அங்கு போராட்டத்தை நடத்தியிருந்தனர்.
இந்தப் போராட்டம் மாலை 3 மணிவரை இடம்பெற்று உறுதியுரையுடன் முடிவுக்கு வந்திருந்தது. ஐ.நாவின் மிகப் பிரமாண்டமான அனைத்துலக மாநாட்டை மையப்படுத்தி புலம்பெயர் தமிழ் மக்கள் நடத்திய இந்தப்போராட்டம் சிறிலங்கா அரசாங்கத்துக்கு கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.