கிளாஸ்கோவில் ஜனாதிபதி கோட்டாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
01 Nov,2021
கிளாஸ்கோவில் காலநிலை மாற்ற மாநாடு நடந்து கொண்டிருக்கும் நிலையில், புலம்பெயர் தமிழர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த மாநாட்டில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார்.
இதேவேளை, இன்று அதிகாலை கிளாஸ்கோ நகரில் கோட்டாபய ராஜபக்ச தங்கியிருந்த விடுதியை சூழ்ந்து கொண்ட புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.
கிளாஸ்கோ நகரின் Dunblane , Hydro Perth Rd இலுள்ள Hilton Hotelஇல் மாநாட்டில் கலந்துகொள்ள வந்துள்ள பல உலகத் தலைவர்கள் தங்கியிருக்கின்ற நிலையில், அங்கு தங்கியிருக்கும் கோட்டாபயவுக்கு எதிராக இன்று அதிகாலை முதல் கோஷங்களை எழுப்பி எமது எதிர்ப்புக்களைத் தெரிவித்திருந்தனர்.
ராஜபக்ச ஒரு போர் குற்றவாளி', 'மனித உரிமைகளை மீறுபவர்', 'கொ லையாளி' என்று பல்வேறு கோசங்கள் அங்கு எழுப்பப்பட்டுக் கொண்டிருந்தன.
பின்னர் அவர் மாநாட்டுக்குப் புறப்பட்டுச் சென்ற போது வாகனத்தை மறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொலிசார் தலையிட்டு பாதுகாப்பு அளித்து அவரது வாகனத்தை அனுப்பிவைத்தனர்.
இந்நிலையில் தற்போது, புலம்பெயர் தமிழர்கள் மாநாடு நடைபெறும் மண்டபத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளனர்.