முற்றுகைக்குள் சிக்குவாரா கோட்டாபய? பெரும் திரளாகும் புலம்பெயர் தமிழர்கள்
31 Oct,2021
ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டில் பங்கெடுப்பதற்காக தற்போது ஐக்கிய இராஜ்ஜியத்தின் கிளாஸ்கோ நகரில் தங்கியிருக்கும் சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு (Gotabaya Rajapaksa) எதிராக பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழர்களின் போராட்ட முனைப்புகள் தீவிரமடைந்துள்ளன.
ஈழத் தமிழினத்தின் மீது இனப்படுகொலையை செய்த கோட்டாபய ராஜபக்ச ஒரு போர்க்குற்றவாளி என்பதால் இந்த மாநாட்டில் அவர் பங்கெடுக்கக்கூடாதென்ற நிலைப்பாட்டை வலியுறுத்தியும், போர்க்குற்றங்களுக்கு அவரை பொறுப்புக்கூற வைக்குமாறு அனைத்துலக சமூகத்திடம் கோர அழுத்தம் கொடுக்கும் வகையிலும் நாளை மாநாடு இடம்பெறும் நிகழ்வு வளாகத்திற்கு எதிரே ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளும் தமிழ்மக்கள் இன்று லண்டனில் இருந்து சிறப்பு பேருந்துகள் மற்றும் வாகனங்களில் மாலை புறப்படவுள்ளனர். பிரான்ஸ் உட்பட்ட ஏனைய நாடுகளில் இருந்தும் மக்கள் கிளாஸ்கோவுக்கு வரவுள்ளதாக தெரியவருகிறது.
இதேவேளை கிளாஸ்கோவில் தங்கியுள்ள சிறிலங்கா அரச தலைவருக்கு எதிராக ஸ்கொட்லாந்து தமிழர்கள் சமூகவலைத்தள பதிவுகள் ஊடாக கடுமையான எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
கிளாஸ்கோ நகரில் நாளை முற்பகலில் இடம்பெறவுள்ள கண்டனப் போராட்டத்தில் புலம்பெயர் தமிழ் மக்கள அணிதிரண்டு பங்கேற்க வேண்டுமென தமிழகத்தில் உள்ள தமிழ்தேசிய உணர்வாளர்களும் தொடர் அழைப்புக்களை விடுத்துள்ளனர்.
ஏற்கனவே ஸ்கொட்லாந்தின் தலைநகரான எடின்பரோ மற்றும் ஐ.நா மாநாடு இடம்பெறவுள்ள கிளாஸ்கோ ஆகிய நகரங்களில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்களில் கோட்டாபாயவுக்கு எதிராக பிரமாண்ட அளவில் சீரொளி பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
தமிழ் மக்கள் மீது இனப்படுகொலை செய்த போர்க்குற்றவாளி ஒருவர் ஸ்கொட்லாந்து வருவதான அடிப்படையில், ஸ்கொட்லாந்தைத் தளமாககொண்டு வெளிவரும் தி ஹெரால்ட் மற்றும் தி நேஷனல் ஆகிய முக்கிய பத்திரிகைகளில் தொடர்ந்தும் ஆக்கங்கள் வெளிவரும்நிலையில் இந்த சீரொளிக் காட்சி பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.