தமிழர் தாயக நிலங்களை அபகரிப்பதை நிறுத்து! 
                  
                     29 Oct,2021
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	 
	அனுராதபுர மாவட்டத்தின் வடக்கு பகுதியை சேர்ந்த சிங்கள கிராமங்கள் சிலவற்றை வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவுடன் எல்லை நிர்ணயத்தின் ஊடாக இணைக்க மேற்கொள்ளப்படும் செயற்பாட்டை கண்டித்து வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று இன்று இடம்பெற்றது.
	 
	    
	தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ்வார்ப்பாட்டத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட அக்கட்சியின் முக்கியஸ்தர்கள், வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
	 
	இதன்போது பழைய பேரூந்து நிலையத்தினை சூழவுள்ள வர்த்தக நிலையங்களுக்குச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் உட்பட குழுவினர் சிங்கள குடியேற்றங்கள் மற்றும் அதனால் ஏற்படபோகும் பாதிப்புக்கள் தொடர்பில் மக்களை தெளிவுப்படுத்தும் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்திருந்தனர்.
	 
	குறித்த ஆர்ப்பாட்டத்தில், “அடங்க மறுப்பது எம்மினத்தின் குணம்”, “எமது நிலத்தில் எம்மை நிம்மதியாக வாழ விடு”, “சீண்டாதே சீண்டாதே தமிழர்களை சீண்டாதே”, “இலங்கை அரசை குற்றவியல் நீதிமன்றத்தில் உடன் பாரப்படுத்து”, “மீண்டுமோர் இனவழிப்பு அரங்கேற்றமா”, “தமிழர் தாயகத்து நிலங்களை அபகரிப்பதை நிறுத்து” போன்ற பதாதைகளை தாங்கியிருந்ததுடன் கோஷங்களையும் எழுப்பினர்.