இந்திய கோடீஸ்வரர் மன்னாருக்கு திடீர் விஜயம் - சீனாவிற்கு நிகரான முதலீட்டை குறிவைத்து நகர்வு
                  
                     26 Oct,2021
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	 
	இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்தியாவின் பிரபல வர்த்தகரான அதானி (Athani) மற்றும் அவரது குழுவினர் நேற்றைய தினம் மன்னார் மாவட்டத்திற்கு திடீர் விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்.
	 
	யாழ். மாவட்டத்திலுள்ள தீவுப் பகுதிகளில் காற்றாலை மின்னுற்பத்தி திட்டம் குறித்து சீனாவின் பார்வை திரும்பிய நிலையில், மன்னார் மாவட்டத்தில் காற்றாலை மின்திட்டம் பற்றி அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவுடன் அதானி குழுவினர் பேச்சு நடத்தியிருக்கின்றனர்.
	 
	மன்னார் நடுக்குடாவில் அமைக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது காற்றாலை திட்டத்தைப் பார்வையிட கோடீஸ்வர இந்திய வர்த்தகரான கௌதம் அதானியின் மகன் மற்றும் அதானி குழுமத்தின் நிறைவேற்று அதிகாரி உள்ளிட்டவர்கள் நேற்றைய தினம் மாலை மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
	 
	இலங்கைக்கு நேற்றைய தினம் விஜயம் செய்த இவர்கள், அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
	 
	இந்தச் சந்திப்பின் பின்னரே அவர்கள் மன்னாருக்குச் சென்றதாக கூறப்படுகின்றது. இந்நிலையில், அதானி குழு நிறுவனம், கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையில் அபிவிருத்திப் பணிகளுக்கு மேலதிகமாக இந்த நாட்டின் எரிசக்தி மீள் உற்பத்தி திட்டம் குறித்தும் அவதானத்தை திருப்பியுள்ளது.
	 
	அதானி குழுவினர்  கோட்டாபய ராஜபக்ஷவிடம் நடத்திய சந்திப்பின்போது மன்னாரில் காற்றாலை மின்னுற்பத்தி திட்டம் குறித்து விரிவாக பேச்சு நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
	 
	இந்த விஜயத்தில் விமான மற்றும் முதலீட்டு இராஜாங்க அமைச்சர் டி.வி சானக்கவும் பங்கேற்றிருந்தார்.