சாணக்கியன் நம்பிக்கைக்கு உரியவர் அல்ல – டக்ளஸ் குற்றச்சாட்டு!
                  
                     19 Oct,2021
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் நம்பிக்கையில்லாத ஒருவர்  என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
	 
	கிளிநொச்சியில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
	 
	இந்தியக் கடற்றொழிலாளர்களினால் மேற்கொள்ளப்படுகின்ற எல்லை தாண்டிய அத்துமீறிய சட்ட விரோத தொழில்முறைக்கு எதிராக 2017 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இழுவை வலை தடைச் சட்டம் பயன்படுத்தப்படாமையினாலேயே இந்தியக் கடற்றொழிலாளர் அதிகளவில் எல்லை தாண்டி வருவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இதுதொடர்பாக ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த கடற்றொழில் அமைச்சர்,
	 
	குறித்த சட்டத்தினை உருவாக்கியபோது, மூன்றிலிரண்டு பெரும்பாண்மையை பெற்றுக் கொள்வதற்காக ஈ.பி.டி.பி. கடசியும் ஆதரவளித்திருந்தமையை சுட்டிக்காட்டினார்.
	 
	மேலும், தம்மால் உருவாக்கப்பட்ட ஆட்சிக் காலத்தில் குறித்த சட்டம் இயற்றப்பட்டதாக தெரிவிக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் போன்றவர்கள், தமது ஆட்சிக் காலத்தில் இந்தியக் கடற்றொழிலாளர்களுக்கு எதிராக குறித்த சட்டத்தினை பிரயோகிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
	 
	2017 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் இழுவை வலைச் சட்டம் உருவாக்கப்பட்ட பின்னர் சுமார் 100 இற்கும் மேற்பட்ட இந்திய மீன்பிடிப் படகுகள் கைப்பற்றப்பட்ட போதிலும், அவைக்கு எதிராக இழுவை வலைத் தடைச் சட்டம் பயன்படுத்தப்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டினார்.
	 
	எனினும், தற்போது குறித்த சட்டங்களின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்வதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அண்மையில், தமிழரசுக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் அவர்களின் ஆதரவாளர்களும் இணைந்து முல்லைத் தீவில் இருந்து பருத்திதுறை வரை மேற்கொண்ட கடற் பயணம் தொடர்பாக அலட்டிக் கொள்ளவில்லை எனவும் அது தோல்வியில் முடிவடைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
	 
	அந்தோடு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ஒரு நம்பிக்கை அற்றவர் எனவும் அவர் கடந்த காலங்களில் எங்கு இருந்தார், தற்போது எங்கு இருக்கிறார், நாளை எங்கு செல்வார் என்பது  அனைவருக்கும் தெரியும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்