புதுப்பிக்கத்தக்க எரிசக்தி குறித்த புதிய ஆராய்ச்சியை மேற்கொள்ளும் இலங்கை விஞ்ஞானி தனது குடும்பத்துடன் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்கொண்டிருப்பதாக கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.
கலாநிதி நடராஜா முகுந்தன்(Dr. Nadaraja Mukundan), 47, அவரது மனைவி ஷர்மிளா(Sharmila), 42, மற்றும் அவர்களின் 13, ஒன்பது மற்றும் ஐந்து, வயதுடைய மூன்று குழந்தைகள்,இந்த நாடு கடத்தல் அபாயத்தை எதிர்கொண்டுள்ளனர்.
2018 இல் சூரிய சக்தியை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் மெல்லிய பட ஒளிமின்னழுத்த சாதனங்களின் உற்பத்திதுறையில் பணிபுரிய முகுந்தனுக்கு வழங்கப்பட்ட அனுமதியால் அவர் இங்கிலாந்துக்கு வந்தார். பொதுநலவாய திட்டமொன்றின்மூலம் இங்கிலாந்துக்கு வந்து ஆராய்ச்சி செய்து பணியாற்ற அவருக்கு அனுமதி கிடைத்தது.
அவரது மனைவி முதியோர் இல்லத்தில் வயதானவர்களைப் பராமரிக்கும் வேலையைப் பெற்றார். நவம்பர் 2019 இல், முகுந்தன் தனது நோய்வாய்ப்பட்ட தாயைப் பார்க்க ஒரு குறுகிய பயணமாக தனது சொந்த நாடு திரும்பினார். அங்கு அவர் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டார். அவர் அங்கிருந்து தப்பி இங்கிலாந்து திரும்பினார்.
அவர் இலங்கை வந்தபோது அனுபவித்த அனுபவத்தின் அடிப்படையில் தஞ்சம் கோரினார். பெப்ரவரி 2020 இல் அவரது உதவித்தொகை காலாவதியான பிறகு, அவரும் அவரது மனைவியும் தொடர்ந்து வேலை செய்ய அனுமதிக்கப்படவில்லை.
இந்த ஆண்டு செப்ரெம்பர் 20 ஆம் திகதி உள்துறை அமைச்சக அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்ட மின்னஞ்சலில்,குடும்பத்தின் புகலிடக் கோரிக்கை "செயலில் பரிசீலனையில் உள்ளது", என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.ஆனால் ஒக்டோபர் 11 அன்று அனுப்பப்பட்ட மற்றொரு மின்னஞ்சலில் புகலிடக் கோரிக்கை மறுக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
குடும்பம் பிரிஸ்டலில் வாடகைக்கு வீடு எடுத்து இருந்ததுடன் அனைத்து பிள்ளைகளும் அங்குள்ள பாடசாலையில் கல்வி கற்றனர். இந்த தம்பதியின் மூத்த மகள் கிஹானியா 100% வருகை விகிதத்துடன் சிறந்த பாடசாலை அறிக்கைகளைப் பெற்றார். குறிப்பாக அறிவியலில் அவர் செய்த சாதனைகளுக்காக பாராட்டப்பட்டார். அவள் வயதாகும்போது ஒரு டொக்டராகப் வரவேண்டும் என்று விரும்புகிறாள்.
பிரிஸ்டலில் உள்ள வாடகை விடுதியில் இருந்து குடும்பத்தை கடந்த மாதம் லண்டன் ஹோட்டலுக்கு மாற்றிய உள்துறை அமைச்சு, மூன்று பிள்ளைகளையும் பாடசாலைகளில் இருந்து வெளியேற்றியது. எனினும் இரண்டு இளைய பிள்ளைகளுக்கு தற்போது பாடசாலை செல்ல அனுமதி வழங்கப்ட்டுள்ளது.ஆனால் கிஹானியாவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அவர் ஹோட்டலில் அடைக்கப்பட்டுள்ளார். "இங்கே மிகவும் சலிப்பாக இருக்கிறது. இது ஒரு சிறைச்சாலை போன்றது, ”என்று அவர் கார்டியனிடம் கூறினார். "நான் பள்ளிக்கு செல்ல விரும்புகிறேன். சில நேரங்களில் நான் எனது பள்ளி சீருடையை அணிந்துகொண்டு தெருவில் போய் நிற்கிறேன். ”என தெரிவித்துள்ளார்.
முகுந்தனின் புலமைப்பரிசில் விசா முதலில் காலாவதியானபோது, முதியோர் இல்ல மேலாளர் ஷர்மிளாவை தொடர்ந்து வேலை செய்ய அனுமதிக்குமாறு உள்துறை அமைச்சிடம் கோரிய போதிலும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.