30 ஆயிரம் பேர் நீரில் மூழ்கும் அபாயம்!! பேரதிர்ச்சியில் மக்கள்
06 Oct,2021
மட்டக்களப்பு கிராண் புல் அணைக்கட்டுப் பகுதியில் கடந்த 2015ஆம் ஆண்டு மண் அகழ்வுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளபோதும் மீண்டும், 15 புதிய மண் அகழ்வு உரிமம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டமைக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இன்று காலை 15 புதிய மண் உரிமம் வழங்குவதற்கு வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மண் தரகர்களுடன் செங்கலடி பிரதேச செயலாளர், புவி சரிதவியல் திணைக்கள அதிகாரி, வன இலாக்க அதிகாரிகள் வருகை தந்து இருந்தனர்.
இதன்போது அதிகாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக பார்வையிட வந்த அதிகாரிகள் திரும்பிச் சென்றுள்ளனர்.
கிராண் புல் அணைக்கட்டு தற்போது உடைந்து காணப்படுகின்ற போதிலும், அதற்கு ஒரு பாலம் போடுவதற்கு எவரும் முன்வராத நிலையில், மண் அகழ்வுக்கு 15 உரிமம் அனுமதி வழங்கியிள்ளமை விவசாயிகள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த இடத்தில் மண் அகழ்வு மேற்கொண்டால், சுற்றியுள்ள 30 ஆயிரம் குடும்பங்கள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளதாகவும், விவசாய நிலங்களும் முற்றாக நீரால் மூழ்கி பாதிப்பை ஏற்படுத்தும் என விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறும் மண் அகழ்வுக்கு பின்னால் அரசியல் தலையீடு உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
தங்களது வியாபாரத்தில் அரச அதிகாரிகள் பிழையான செயற்பாடு மேற்கொண்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக மண் வியாபாரிகள் கூறுகின்றனர்.
புதிய 15 மண் உரிமம் தொடர்பாக பிரதேச செயலாளரும், புவி சரிதவியல் அதிகாரியும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க மறுத்ததுடன் விவசாயிகளின் எதிர்ப்பால் திரும்பிச் சென்றுள்ளனர்.