ஆட்சியை மாற்ற வேண்டும்! - இல்லாவிட்டால் ஆபத்து.
19 Sep,2021
சர்வதேச சமூகத்திற்கு இரு முகத்தினை காண்பிக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான ஆட்சியை மாற்ற வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சமூகத்திற்கு இரு முகத்தினை காண்பிக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான ஆட்சியை மாற்ற வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தற்போதைய ஜனநாயகத்திற்கு எதிரான நிலைப்பாடுகளைக் கொண்ட அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில் நீடித்தால் ஒட்டுமொத்த சிறுபான்மையினருக்கும் பேராபத்து என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாங்கள் எந்தவொரு அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. அவ்வாறு கொள்ளப்போவதும் இல்லை. கடந்த அரசாங்கத்தின் மீதும் அவ்வாறான நிலைப்பாட்டிலேயே இருந்தோம். ஆனால் அவர்கள் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதாக சொன்னார்கள். அதற்காக அவர்களுடன் இணைந்து முயற்சிகளை எடுத்தோம். அது சாத்தியமாகவில்லை.
அவ்வாறிருக்கையில், தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கமானது சர்வதேசத்திற்கு இரட்டை முகத்தினைக் காண்பிக்கின்றது.
கடந்த மார்ச் மாதத்தில் நடைபெற்ற ஐ.நா.வின் 46ஆவது கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது அதனை முழுமையாக இலங்கை அரசாங்கம் நிராகரித்தது. பின்னர் ஜுனில் 47ஆவது கூட்டத்தொடர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது பொறுப்புக்கூறல் விடயத்தில் கூட ஐ.நா.மனித உரிமைகள் பேரவையுடன் இணைந்து பணியாற்றுவதற்கு தயார் என்று டுவிட்டர் மூலம் அறிவித்தார்.
அவ்வாறிருக்கையில் தற்போது மீண்டும் ஐ.நா.மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகரின் அறிக்கையை நிராகரிப்பதாக அரசாங்கம் அறிவிக்கின்றது. உண்மையிலேயே அரசாங்கம் தனக்குள்ள இரண்டு முகங்களில் எதனைக் காண்பிப்பது என்பது தொடர்பில் தெரியாது நிற்கின்றது. ஆகவே அரசாங்கம் தனது போக்கினை மாற்ற வேண்டும். அவ்வாறு இல்லாது விட்டால் நாட்டிற்கு மோசமான பின்விளைவு காத்திருக்கும்.
இதேவேளை, எதிரணிகளின் அரசுக்கு எதிரான ஒன்றிணைவின்போது இனப்பிரச்சினை விடயத்தினையும் உள்ளீர்க்க வேண்டும் என்பது எமது நிலைப்பாடாகும். கடந்த தடவையும் அந்த விடயம் உள்ளீர்க்கப்பட்டது. அந்த வகையில் இம்முறையும் அவ்விதமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் போது நாம் எமது விடயங்களையும் முன்னிலைப்படுத்துவோம்.
எவ்வாறாயினும் தற்போது காணப்படுகின்ற கொடூரமான ஆட்சியை தொடர இடமளிக்க முடியாது. அவ்வாறு இடமளிக்க விடுவதானது சிறுபான்மை தேசிய இனங்களுக்குறிப்பாக தமிழர்களுக்கு பேராபத்தானது. விசேடமாக இந்த ஆட்சிக்காலத்தில் நில அபகரிப்புக்கள் அதிகமாகியுள்ளன. இந்நிலைமை தொடர்ந்தால் தீர்வு பற்றி பேசுகின்ற போது நாம் நிலமற்றவர்களாகி விடுவோம்.
அதற்கு பின்னர் தீர்வினைப் பெற்றுக்கொள்வதில் பயனில்லை. ஆகவே அவ்விதமான ஆக்கிரமிப்பு, அடக்குமுறை ஆட்சியை மாற்ற வேண்டும் என்றார்.